இனி சென்னை செல்ல வேண்டாம்; தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலேயே அதிநவீன ஆஞ்சியோகிராம் சிகிச்சை
இந்த சிகிச்சை அனைத்தும் முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக அதிநவீன ஆஞ்சியோகிராம் மூலம் இருதய ஓட்டையை சரி செய்யும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ஜி.சிவக்குமார், மூத்த இருதய மருத்துவ நிபுணர் பாலமுருகன் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தனர்.vஅவர்கள் கூறும்போது, "தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இருதய பிரிவில் இருதய ரத்தக்குழாய் நுண் சிகிச்சை ஆய்வு கூடம்(கேத்லேப்) தொடங்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மாரடைப்பு நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் 3 ஆயிரம் பேர் பயன்பெற்று உள்ளனர். தற்போது மேலும் ஒரு மைல் கல்லாக அதிநவீன இருதய சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
பிறக்கும் குழந்தைகளில் 100-ல் ஒருவருக்கு இருதய கோளாறு இருக்க வாய்ப்பு உள்ளது. அதில் பெரும்பாலும் இருதயத்தில் உள்ள இரண்டு அறைகளுக்கு நடுவே உள்ள சுவரில் ஏற்படும் ஓட்டை ஆகும். இந்த ஓட்டைகள் ஆரம்ப காலகட்டங்களில் ஓபன் ஹார்ட் சர்ஜரி, இருதய பைபாஸ் சிகிச்சை மூலமாகவே சரி செய்யப்பட்டது. தற்போது அறுவை சிகிச்சை இல்லாமல் ஆஞ்சியோகிராம் மூலம் ஓட்டைகளை அடைக்கும் அதிநவீன சிகிச்சை செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. இதில் தழும்பு இல்லாமல், ரத்தம் வீணாகாமல் ஓட்டையை அடைக்க முடியும். இந்த அதிநவீன சிகிச்சை சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக அதிநவீன ஆஞ்சியோகிராம் மூலம் இருதய ஓட்டையை சரி செய்யும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி இருதய மருத்துவ நிபுணர் பாலமுருகன் தலைமையில், குழந்தைகள் இருதய மருத்துவ நிபுணர் செந்தில்குமார், டாக்டர் கணேசன், டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் ஆலன்பெண்ணி மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவினர், ஒரே நாளில் 4 வயது குழந்தை, 14 வயது சிறுமி, 15 வயது சிறுவன் ஆகிய 3 பேருக்கு அதிநவீன ஆஞ்சியோகிராம் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து உள்ளனர். 3 பேரும் நலமோடு உள்ளனர். இந்த சிகிச்சை அனைத்தும் முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் செய்வதற்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும்.
இது போன்ற அதிநவீன சிகிச்சை தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி இருப்பதால், நோயாளிகள் இனிமேல் சென்னை வரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலேயே பரிசோதனை செய்து சிகிச்சை பெறலாம். பொதுமக்கள் இருதய நோய்கள் குறித்து விழிப்புணர்வு பெற்று, தகுந்த நேரத்தில் அரசு மருத்துவமனையின் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றனர். பேட்டியின் போது, உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் சைலஸ் ஜெயமணி, மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் டாக்டர் ஆர்.பத்மநாபன், டாக்டர் குமரன், மருத்துவ துறை பேராசிரியர்கள் டாக்டர் ராஜவேல், டாக்டர் பரத், டாக்டர் மணிமேகலை, மயக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் வி.மனோரமா, குழந்தைகள் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் அருணாசலம் ஆகியோர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )