”மலநாடு நிறுவனத்தில் அமோனியா கசிவு?” அச்சத்தில் நெல்லை அணைந்தநாடார்பட்டி மக்கள்..!
"மலநாடு அமோனியா ஆலையை மூட வேண்டும் என்று கடந்த மார்ச் மாதமே திமுக சார்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை”
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் – ஆலங்குளம் சாலையில் அணைந்தநாடார்பட்டி என்ற பகுதியில் அமைந்துள்ள ”மலநாடு” என்ற தனியார் நிறுவனத்தில் இருந்து, கடந்த சனிக்கிழமை அமோனியா கசிவு ஏற்பட்டு, அருகே தோட்டத்தில் பணி செய்துக்கொண்டிருந்த மக்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் மலநாடு அமோனியா நிறுவனத்தில் ஆய்வு நடத்தியுள்ள நிலையில், பெரிய ஆபத்து ஏதும் ஏற்படும் முன்னர், மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி அருகே இருக்கும் அமோனியா ஆலை – பயத்தில் பெற்றோர்கள்
மலநாடு அமோனியா ஆலை செயல்படும் பகுதியிலேயே 50 அடி தூரத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒருவேளை, அமோனியா கசிவு இங்கு ஏற்பட்டால் அந்த பள்ளியில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு, ஆலையை முறையாக ஆய்வு செய்து, அமோனியா கசிவு இருந்தால் மலநாடு ஆலையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சனிக்கிழமை நடந்தது என்ன ?
கடந்த 28ஆம் தேதி சனிக்கிழமை அன்று அணைந்தநாடார்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவரது தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு திடீரென கண் எரிச்சல், வாந்தி, தொண்டை எரிச்சல் ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் தனது தோட்டத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்த ‘மலநாடு அமோனியா” நிறுவனத்திற்கு சென்று, விசாரித்தபோது, அமோனியாவை நிரப்பும்போது சிறிய கசிவு ஏற்பட்டது என நிர்வாகம் தரப்பில் தனக்கு தெரியப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், அணைந்தநாடார்பட்டி பகுதி மக்களும் அமோனியா கசிவு ஏற்பட்டதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
ஆட்சியர் உத்தரவில் நிறுவனத்தில் ஆய்வு செய்த வட்டாட்சியர்
இது குறித்து நெல்லை ஆட்சியர் கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்த நிலையில், வட்டாட்சியர் தலைமையில் குழுவினரை அனுப்பி மலநாடு நிறுவனத்தில் ஆய்வு நடத்த சொல்லியுள்ளார். ஆனால், ஆய்வு செய்த வட்டாட்சியர் சபரிமல்லிகா மற்றும் தொழிற் பாதுகாப்புத் துறை துணை இயக்குநர் கணேசன் ஆகியோர், சனிக்கிழமை மலநாடு நிறுவனத்தில் என்ன நடந்தது, வாயு கசிவு ஏற்பட்டதா அல்லது இல்லையா என்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்பித்துள்ளனர்.
”மலநாடு அமோனியா நிறுவனம்” சொல்வது என்ன ?
இது குறித்து மலநாடு அமோனியா நிறுவனத்தின் மேலாளர் ஜோசப்பை தொடர்புகொண்டு கேட்டபோது, ”அமோனியா கசிவு எதுவும் ஏற்படவில்லையென்றும் 20% நீராக இருக்கும் அமோனியா வேண்டுமென்றால் காற்றில் வெளியில் சென்றிருக்க வாய்ப்பு இருக்கும் எனவும், அதனால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லையென தெரிவித்துள்ளார். தங்களது நிறுவனத்தில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளதாகவும், அமோனியா கசிவு ஏற்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால், சனிக்கிழமை அருகே உள்ள தோட்டத்தில் பணி செய்தவர்கள் அமோனியா கசிவால் பாதிப்படைந்ததாக சொல்கின்றார்களே என கேட்டபோது, அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என சொல்லியுள்ளார்”
ஆலையை மூட வேண்டும் – திமுக சார்பில் மனு
“மலநாடு அமோனியா” ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று திமுக சார்பில் பாப்பாக்குடி ஒன்றிய குழு பெருந்தலைவர் பூங்கோதை சசிகுமார் என்பவர் கடந்த மார்ச் மாதமே சேரன்மகாதேவி கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில், மலநாடு என்ற அமோனியா உற்பத்தி செய்யும் தனியார் ஆலையில் மாலை, இரவு நேரங்களில் அவ்வப்போது அமோனியா வாயு கசிவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன என்றும் இந்த ஆலையின் அருகே தனியார் பள்ளி இயங்கி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ள திமுக ஒன்றிய பெருந்தலைவர், அமோனியா கசிவால் சென்னை, மதுரையில் ஏராளமானவர்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு அதுபோன்று எதுவும் ஏற்பட்டுவிடாதபடி, ஆலையை நிரந்தரமாக மூடவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றம் செய்யவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனு மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடவடிக்கை எடுக்குமா அரசு ?
அமோனியா வாயு கசிந்தால் அது பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கடந்த கால சம்பவங்கள் மூலம் இந்த நாடே அறிந்துள்ள நிலையில், மலநாடு நிறுவனத்தில் உரிய ஆய்வு செய்து, அமோனிய வாயு கசிவது உறுதியானால் உடனடியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்டால், பெரிய பாதிப்பை மக்கள் சந்திக்க நேரிடும் சூழல் ஏற்பட்டுவிடும் என்பதை அதிகாரிகளும் உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.