குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு குழந்தைகள், பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்று ஏற்பாடு!
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு குழந்தைகள், பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வருவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு ஆலோசித்திருக்கிறோம் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார்.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு குழந்தைகள், பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வருவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு ஆலோசித்திருக்கிறோம் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, "தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே முந்தைய மாவட்ட ஆட்சியர் ஒரு ஒருங்கிணைப்பு ஆய்வுக்கூட்டத்தினை கடந்த அக்டோபர் 9ம் தேதி நடத்தி விரிவான அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் நான் இந்த திருக்கோயில் வளாகத்தை ஆய்வு செய்திருக்கிறேன். அதைத்தொடர்ந்து பல துறை அலுவலர்களுடன் ஒரு ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இந்த திருவிழா தொடர்பான அரசுத்துறை அலுவலர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள். அதில் முக்கியமாக 23ம் தேதியில் இருந்தே அதிக அளவில் பக்தர்கள் வருவதற்கான வாய்ப்பும், அக்டோபர் 25ம் தேதிவரை இது தொடர வாய்ப்பும் இருப்பதால் இங்கே வரக்கூடிய லட்சக்கணக்கான பக்தர்களின் தேவைகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் ஒரு விரிவான தொடர் நடவடிக்கை கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் முக்கியமாக வரும் பக்தர்களுக்காக பாதுகாப்பான குடிநீர், போதுமான குடிநீர் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறைகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், குலசேரன்பட்டினம் ஊராட்சி, இந்து சமய அறநிலையத்துறை மூலம் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்ய அறிவுரைகள் வழங்கப்பட்டது. அதேபோல பொது சுகாதாரம் பாதிக்கப்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகள், நோய் தடுப்பு நடவடிக்கைகள் செய்ய பொது சுகாதாரத்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. வரக்கூடிய பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல் துறை மூலம் செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் பல லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு இருப்பதால் 3000 போலீசார், என்.எஸ்.எஸ். சேர்ந்தவர்கள் ஈடுபட உள்ளனர். போதுமான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கே நூற்றுக்கணக்கான வாகனங்கள் வர வாய்ப்பு உள்ளது.
திருச்செந்தூர், உடன்குடி, கன்னியாகுமரியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் நிறுத்த 25 வாகன நிறுத்துமிடம் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே இருந்து பாதுகாப்பாக இங்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் காவல் துறை மூலம் கோபுரம் அமைத்தும், சிசிடிவி கேமிரா அமைத்தும் உடனுக்குடன் கண்காணிக்க முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து துறையும் இங்கே போக்குவரத்து வசதிகள் போதுமான அளவில் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை தசரா திருவிழா சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு முன்னேற்பாடு நடவடிக்கை கூட்டங்கள் இங்கே நடத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் 15 உதவி மையங்கள் அமைத்து வாக்கி டாக்கி மூலமும் அவர்களுக்குள் ஏதாவது தகவல் பரிமாறிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதற்கும், அவர்களுக்கு இடர்பாடுகள் ஏற்பட்டால் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை அணுகலாம். போக்குவரத்து குறித்து விரிவான அறிவுரை கொடுத்திருக்கிறோம்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு முன்னேற்பாடு செய்திருக்கிறோம்.வாகனம் நிறுத்துமிடம் தெளிவாக வரையறை செய்து நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்துள்ளார்கள். கடந்த ஆண்டுகளில் இடையூறுகள் இருந்தால் அவை மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். தசராவுக்கு வேடம் அணிந்தவர்கள் தனியாகவும், பொதுமக்கள் தனியாகவும் செல்ல வழி செய்திருக்கிறார்கள். காவல் துறை மூலம் சாதி ரீதியான பிரச்சனைகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள், பெரியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வருவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு ஆலோசித்திருக்கிறோம்" என்றார்.