ஆதிச்சநல்லூர் அகழாய்வு: முதுமக்கள் மூடி தாழியில் பனை ஓலை அச்சு கண்டுபிடிப்பு
தொல்லியல் பொருட்கள் ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆதிச்சநல்லூர் பக்கம் திரும்பியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020ம் ஆண்டு அறிவித்திருந்தார். அதன் முதல் கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வு பணிகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் நடந்து வருகிறது.
இந்த அகழாய்வு பணியில் 80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டம், சங்க கால வாழ்விடப்பகுதிகள், அம்புகள், வாள், ஈட்டி, சூலம், தொங்கவிட்டான் போன்ற தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அகழாய்வு பணியில் 80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் சி சைட் என அழைக்கப்படும் 1902ஆம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா அகழாய்வு செய்த பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணியில் தற்போது வித்தியாசமான முதுமக்கள் தாழி மூடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அனைத்து முதுமக்கள் தாழிகளின் மூடிகளும் கூம்பு வடிவில் தான் இங்கே காணப்படும். ஆனால் தற்போது கிடைத்த ஒரு முதுமக்கள் தாழியின் மூடி மட்டும் தட்டை வடிவில் உள்ளது. அந்த தட்டை வடிவில் உள்ள பகுதியில் பனை ஓலைப்பாய் அச்சுகள் உள்ளது. அந்த அச்சுகள் பனை ஓலையால் ஆனதா, அல்லது கோரப்பாய் என அழைக்கப்படும் கோரைப்புல்லில் நெய்யப்பட்ட பாயின் அச்சுகளா என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு முடிவு வெளிவரும் போது பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முதுமக்கள் தாழிகள் செய்யும் போது, அதனை காய வைப்பதற்கு இந்த பனை ஓலை பாய் அல்லது கோரைப்பாயின் மேல் வைத்திருக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது 3500 ஆண்டுகளுக்கு முன்னரே முன்னோர்கள் பனை மற்றும் பனை சார்ந்த பொருட்களை பயன்படுத்தியுள்ளது உறுதி ஆகி உள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல்லை மாவட்டத்தில் பத்தமடை பாய் நெய்வதற்காக கோரைப்புல்கள் வளர்க்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தககது. அதுபோலவே பனை மரங்களும் இங்கே சங்க காலத்துக்கு முன்பே வளர்ந்திருக்க வேண்டும். ஆதிச்சநல்லூர் பரம்பை சுற்றி ஏராளமான பனை மரங்கள் உள்ளது. அதே போல் அருகில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் கோரைப்புல்கள் உள்ளன. எனவே இதை முன்னோர்கள் பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் முதலை படம், மான்கள் படம், கரும்பு, நெற்பயிர்கள் வரையப்பட்ட ஓடு 2004 அகழாய்வின் போது கிடைத்துள்ளது. மொத்தத்தில் 3500 வருங்களுக்கு முன்பே நம் தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் பற்றிய தரவுகள் இந்த அகழாய்வின் போது வெளிவரும் என்பது தெரியவருகிறது. தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் பழமையான நாகரித்தைச் சார்ந்த பொருட்கள் கிடைத்து வருவதால் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் மத்திய அகழாய்வு மற்றும் கள ஆய்வு இயக்குநர் லூர்துசுவாமி டெல்லியில் இருந்து அகழாய்வு ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட வருகை தந்தார். இவர் தான் இந்தியாவில் நடந்து வரும் அனைத்து அகழாய்வு பணிகளுக்கும் தொடர்ந்து அகழாய்வு பணிகள் மேற்கொள்ள அனுமதி ஆணை வழங்குபவர். இவர் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணியில் கிடைத்த தொல்லியல் பொருட்கள், முதுமக்கள் தாழிகள், தங்கப்பொருட்களை பார்வையிட்டார். அவருக்கு மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் மற்றும் ஆய்வாளர் எத்திஸ்குமார் ஆகியோர் விளக்கமளித்தனர்.