ஆடி அமாவாசை: சொரிமுத்து அய்யனார் கோயிலில் தங்க இந்தாண்டு கூடுதல் குடில்கள் - நெல்லை ஆட்சியர்
ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு உள்ளிட்ட நாட்கள் வருவதால் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு வரும் மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து குடில்கள் அமைத்து குடும்பத்துடன் தங்கி பூக்குழி இறங்குதல், கிடா வெட்டுதல் என்ற பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபாடு செய்வார்கள். இந்த நிலையில் இந்தாண்டு ஆடி அமாவாசை திருவிழாவானது கடந்த 22 -ந் தேதி விழாவானது கால் நாட்களுடன் திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி அமாவாசை அன்று வருகிற ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு தேதிகளில் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
இதையொட்டி சுமார் 200 தற்காலிக கழிப்பறைகள் பணிகள் அமைக்கும் பணிகள், குடில்கள் அமைக்கும் இடங்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோவில் நுழைவாயில், மேற்கூரை உள்ளிட்ட பகுதியில் வர்ணம் பூசுதல், சீரமைப்புகள், பந்தல் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இன்று இரண்டாவது நாளாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நாளை முதல் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் கார்த்திகேயன் அதிகாரிகளோடு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி போதிய முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் சிரமம் இல்லாமல் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்குமிடம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் தங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூய்மைப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வனப்பகுதி பாதிக்கப்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலான எண்ணிக்கையில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி இல்லை. கோவில் பகுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகள் தேவையான அளவு செய்யப்பட்டுள்ளது. குடில்களுக்கு கடந்த ஆண்டை விட பாதி அளவு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும். ஆடி அமாவாசை ஆடிப்பெருக்கு உள்ளிட்ட நாட்கள் வருவதால் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு வரும் மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். விலங்குகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதியில், அடர் வனப்பகுதியில் தங்குவதற்கு தடை செய்யப்பட்டது. முறைகேடான செயல்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். வழிபாட்டுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.