Sorimuthu Ayyanar Temple: நெல்லை சொரிமுத்து அய்யனார் கோவிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்..! ஆடி அமாவாசை திருவிழா கோலாகலம்..!
அருள் வந்து ஆடுதல், சங்கிலியால் அடித்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களுடன், அதே போல இரவில் பூக்குழி இறங்கும் நிகழ்வும் வெகு விமர்சையாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்தையனார் கோவில். இக்கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் நெல்லை, தென்காசி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 50,000 மேற்பட்ட பக்தர்கள் சொரிமுத்து அய்யனார் கோவிலில் குவிந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே காணப்பட்டது. மேலும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அருள் வந்து ஆடுதல், சங்கிலியால் அடித்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களுடன், அதே போல இரவில் பூக்குழி இறங்கும் நிகழ்வும் வெகு விமர்சையாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடில்களில் தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நேரத்தில் அவர்கள் குழந்தைகள் தொலையும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பை டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் புதிய முயற்சி எடுத்துள்ளனர். அதாவது கோவிலுக்கு வரும் 7 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் கையில் அந்த குழந்தையின் பெயர் தந்தை பெயர் உள்ளிட்ட விவரங்களை டாக்கில் எழுதி அதை குழந்தைகளின் கையில் கட்டி உள்ளனர். இதனால் அந்த குழந்தைகள் பெற்றோரை விட்டு பிரிந்தாலும், அவர்கள் கையில் கட்டி இருப்பதை வைத்து எளிதில் கண்டறியும் வழிவகை செய்யப்படுகிறது. இந்த முயற்சியானது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் பெண்கள் நகைகளை பாதுகாக்க ஊக்கு (safety pin) களும் வழங்கப்படுகிறது.
மேலும் கூட்டத்தில் யாரேனும் குடும்பத்தினர் விட்டு பிரிந்தாலோ, பொருட்களை தொலைத்தாலோ அல்லது பொருட்கள் எதுவும் கீழே கிடந்து எடுத்துக் கொடுத்தாலோ அவற்றை சொரிமுத்தையனார் கோவில் புற காவல் நிலையத்தில் வைத்து போலீசார் ஒலிபெருக்கி மூலமாக தெரிவித்து பக்தர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.. இன்றும் இரண்டாவது நாளாக பூக்குழி இறங்குதல், சங்கிலியால் அடித்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களும் செலுத்த உள்ளனர். இன்றோடு விழா நிறைவு பெறும் நிலையில் காரையாறு வனப்பகுதியில் குடில்கள் அமைத்து தங்கியிருக்கும் பக்தர்கள் நாளை முதல் கீழே இறங்குவர். பத்கர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.