திருக்களூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்துவரும் அகழாய்வு பணியில் ஏராளமான பொருட்கள் கண்டுபிடிப்பு
ஆதிச்சநல்லூருக்கும் கடல் சார் வணிகத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2020ம் ஆண்டு நடந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதிச்சநல்லூரில் உலத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனையடுத்து ஆதிச்சநல்லூரில் முதல்கட்டமாக அகழாய்வு பணிகள் கடந்த வருடம் தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து அருங்காட்சியக பணிகளும் நடந்து வருகிறது.இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப்பகுதிகளை கண்டறிய ஆதிச்சநல்லூரைச் சுற்றியுள்ள திருக்களூர், அகரம், கொங்கராயகுறிச்சி, ஆதிச்சநல்லூர், கருங்குளம் ஆகிய 5 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தனர்.
இதனையடுத்து கடந்த வருட இறுதியில் முதல் முறையாக வாழ்விடப்பகுதிகளை கண்டறிய திருக்களூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. இதற்காக வரலாற்றுக் கால கல்வெட்டுகளை கொண்ட சேர சோழ பாண்டீஸ்வரர் திருக்கோயில் அருகே பணிகள் தொடங்கியது. அகழாய்வு பணிக்காக மூன்று அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதில் வரலாற்றுக் காலம் முதல் இரும்பு காலம் வரையிலான மண்ணடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு அதிசயமாக 20 செமீ ஆளத்தில் ஐந்து வரிசை கொண்ட சுடப்படாத மண் செங்கல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செங்கள்கள் 26 செமீ நீளம் 18 செமீ அகலம் 8 செமீ உயரத்தில் கிடைக்கப்பட்டுள்ளது. மற்றொரு அகழாய்வுக் குழியில் நான்கு தரைத்தளங்கள் உள்ளது. முதல் மற்றும் இரண்டாம் தரைத்தளங்களில் சுடுமண் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நான்காம் தரைத்தளத்தில் அடுப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கு வரலாற்று காலம் முதல் இரும்பு காலம் வரையிலான பானை ஓடுகள் அதாவது சிவப்பு பானை, கருப்பு சிவப்பு பானை, மெருகேற்றப்பட்ட கருப்பு பானை, மெருகேற்றப்பட்ட சிவப்பு பானை மற்றும் பழுப்பு நிறப் பானை வகை ஓடுகள் கிடைக்கின்றன.மேற்பரப்பு முதல் 2 மீ ஆழம் வரை பல வண்ணங்கள் கொண்ட பாசிகள் மற்றும் உடைந்த வளையல்கள் கிடைக்கப்பெறுகின்றன. பச்சை, சிவப்பு, கருப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்களிலும் வட்டம், உருளை, தட்டு ஆகிய வடிவங்களில் பாசிகள் உள்ளது. அதுமட்டுமின்றி இரும்பு பொருட்கள், செம்பு காசுகள் மற்றும் சுடுமண் உருவங்கள் கிடைக்க பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதன் முதல் கட்டப்பணியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த வரும் அகழாய்வு பணிகள் நடந்தது.இந்த பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பணியில் கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஆவணப்படுத்தும் பணியின்போது ஒரு முதுமக்கள் தாழி பக்கவாட்டில் இரும்பால் ஆன 2 அடி உயரம் கொண்ட நங்கூரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த ஆதிச்சநல்லூருக்கும் கடல் சார் வணிகத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.