ஆகாயத்தாமரையில் இருந்து அழகு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை - 600 பெண்களுக்கு வேலைவாய்ப்பு
தூத்துக்குடியில் ஆகாயத் தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட கூடைகள், அழகு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கான இடம் மற்றும் கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஒதுக்கியுள்ளார்.
தூத்துக்குடியில் ஆகாயத் தாமரையில் இருந்து அழகு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான சிஜி தாமஸ் வைத்யன் தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகாயத் தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் மகளிர் கூட்டமைப்பினருடனான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், மாநில சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குருமான சிஜி தாமஸ் வைத்யன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சிகள் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் இருந்து ஆகாயத் தாமரையை எவ்வாறு சேகரிப்பது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து கண்காணிப்பு அலுவலர் சிஜி தாமஸ் வைத்யன் பேசும்போது, “ஆகாயத் தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து வருகிறீர்கள். இந்த பொருட்களை ஜார்க்கண்டில் எப்படி தயாரிக்கிறார்கள் என்பது குறித்து உங்களுக்கு காண்பித்துள்ளோம். கழிவு என்று நினைத்து கொண்டிருக்கும் பொருளில் இருந்து மதிப்புகூட்டப்பட்ட, வருமானம் தரக்கூடிய பொருளை தயாரிக்க முடியும்.
இந்த தொழில் மூலம் மகளிர் தன்னம்பிக்கையுடன் சுயமாக சம்பாதித்து வாழ முடியும். கனிமொழி எம்பியின் முயற்சியால், ஆகாயத் தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பல்வேறு அழகு பொருட்கள் தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்வது தான் பிரச்சினையாக இருப்பதாக கூறினீர்கள். இதனால் விற்பனை செய்வதற்கான நிறுவனத்தை அழைத்து வந்துள்ளோம். அவர்களுடன் இணைந்து செயல்படுகிறோம்.
இந்த தொழில் தொடர்பான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தூத்துக்குடியில் ஆகாயத் தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட கூடைகள், அழகு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கான இடம் மற்றும் கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஒதுக்கியுள்ளார். தற்போது இந்த பொருட்களை தயாரிப்பதற்கு தூத்துக்குடி சுற்று வட்டாரத்தில் இருந்து மூலப்பொருளான ஆகாயத் தாமரை தேவைப்படுகிறது. ஊராட்சிகளில் ஆகாயத் தாமரையை சேகரிப்பவர்களுக்கு தேவையான பயிற்சியும் அளிக்கப்படும். தொழிற்சாலை தொடங்கப்பட்ட பிறகு உற்பத்தி பொருட்களை தொடர்ந்து வினியோகம் செய்ய வேண்டும்” என்றார்.
ஆகாயத் தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் மகளிர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கூறும்போது, ”ஆகாயத் தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட தரமான பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்த நோக்கத்துக்காக அரசு பயிற்சி அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் ஆகாயத் தாமரை அதிகமாக உள்ளன. இந்த பகுதிகளில் இருந்து ஆகாய தாமரையை பெறுவதற்கு ஊராட்சிகளின் உதவி தேவைப்படுகிறது. ஒரு ஊராட்சியில் உள்ளவர்கள் மற்றொரு ஊராட்சியில் உள்ள குளத்தில் இறங்க பயப்படுகின்றனர். ஒவ்வொரு ஊராட்சியில் இருந்தும் ஆகாயத் தாமரையை சேகரித்து தரலாம். ஜார்கண்டில் உள்ள ஒரு நிறுவனம் ஏற்கனவே இது போன்ற பொருளை தயாரித்து வருகின்றனர். அவர்கள் தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கி கொள்ள தயாராக இருக்கின்றனர்.
எனவே, தூத்துக்குடியில் ஆகாயத் தாமரையில் இருந்து பொருட்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுவில் உள்ள 25 பேர் இயக்குநராக இருப்பார்கள். இந்த தொழிற்சாலை அமைப்பதற்கான இடம் மற்றும் கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஒதுக்கி தந்துள்ளார். ஏற்கனவே நம் பகுதியில் உள்ள 2 கிராமங்களில் பெண்கள் இந்த பொருட்களை தயாரிப்பதற்கான பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்கள் பயிற்சி பெறவுள்ளனர். இந்த தொழிலில் பணியாற்ற 600 பேர் தேவைப்படுகிறார்கள். எனவே ஊராட்சி து தலைவர்கள் இந்த பணியில் ஈடுபட விரும்பும் மகளிரை ஊக்குவிக்க வேண்டும்” என்றனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், பொதுப்பணித்துறை தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன் மற்றும் ஊராட்சித் தலைவர்கள், மகளிர் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.