அண்ணாமலை தோல்வியடைந்ததால் நடுரோட்டில் மொட்டை - சொன்னதை செய்த பாஜக தொண்டர்
தேர்தலில் அண்ணாமலை தோல்வியடைய ‘பெட்’ கட்டிய மாதிரியே மொட்டை அடித்து கொண்டார் பாஜக தொண்டர்.
திருச்செந்தூர் அருகே உள்ள பரமண்குறிச்சி பகுதியில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வியடைந்தால் மொட்டை அடித்து கொள்கிறேன் என மாற்று கட்சி நண்பர்களிடம் பந்தயம் செய்ததையடுத்து மொட்டை அடித்து கொண்டு பஜாரில் வலம் வந்த பாஜக பிரமுகர்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் பரப்புரையின்போதே 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று அவர் தெரிவித்திருந்த நிலையில், சுமார் 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றத்துடன் இவரை எதிர்த்து நின்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழக்க செய்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கோவை தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெறுவார் என மாநிலம் முழுவதும் உள்ள பாஜகவினர் உறுதியுடன் நம்பிக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக சக நண்பர்கள் அரசியல் கட்சியினரிடம் பாஜகவின் பல்வேறு வகையில் பெட் கட்டி இருந்தனர். இத்தேர்தலில் அண்ணாமலை தோல்வியடைய பெட் கட்டிய மாதிரியே மொட்டை அடித்து கொண்டார் பாஜக தொண்டர் ஒருவர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உடன்குடி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு செயலாளராக ஜெயசங்கர் இருந்து வருகிறார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என அப்பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அதிமுக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அப்படி வெற்றி பெறவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என மாற்று கட்சி நண்பர்கள் கேட்ட பொழுது, நிச்சயம் வெற்றி பெறுவார். அப்படி இல்லையென்றால் பரமண்குறிச்சி பஜாரில் வைத்து மொட்டை அடித்து கொண்டு பஜார் பகுதியில் வலம் வருகிறேன் என பந்தயம் கட்டியுள்ளார். இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வியை தழுவினார் .
இதனையடுத்து மாற்று கட்சி நண்பர்களிடம் செய்த பந்தயதிற்காக பரமண்குறிச்சி பஜாரில் வைத்து ஜெயசங்கர் மொட்டை அடித்து கொண்டு பஜாரை வலம் வந்தார். பாஜகவின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் ஜெயசங்கர் பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வி பெற்தையடுத்து மொட்டை அடித்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.