(Source: ECI/ABP News/ABP Majha)
மின்சாரம் இல்லாததால் மெழுகுவர்த்தி ஒளியில் படிக்கும் மாணவிகள்: அலைக்கழிக்கும் அரசு அதிகாரிகள்!
சாத்தான்குளம் அருகே வீட்டிற்கு மின் இணைப்பு கிடைக்காதால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் மாணவிகள்...! உரிய ஆவணங்கள் கேட்டும் தராததால் அலைக்கழிக்கும் அதிகாரிகள்...!
சாத்தான்குளம் அருகே வீட்டிற்கு மின் இணைப்பு கிடைக்காதால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் மாணவிகள் படித்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் கேட்டும் தராததால் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்த பொன்குமார் (42). கார் டிரைவரான இவருக்கு மனைவி ஸ்டெல்லா, மகள்கள் பிரஷிதா, பிரதீபா ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் அவரது பூர்வீக இடமானது குடும்ப கூட்டுப் பட்டாவில் இருந்து பிரிக்கப்பட்ட பின் கடந்த 2018ம் ஆண்டு அந்த இடத்தில் வீடு கட்டியுள்ளார். மின்சார வசதி வேண்டி விண்ணப்பம் செய்திருந்தார். அப்போது மின்வாரிய அலுவலர்கள் வீட்டிற்கு வீட்டு தீர்வை, தனி வரன்முறை பட்டா ஆகிய ஆவணங்கள் கேட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பொன்குமார் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீர்வை மற்றும் பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து உரிய மின்சார வசதி ஏற்படுத்தித் தரவில்லை என கூறப்படுகிறது.
தற்போது பள்ளி திறக்கப்பட்டுள்ளதால் முதல் மகள் கல்லூரியிலும், இரண்டாவது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர் . வீட்டிற்கு மின் இணைப்பு இல்லாததால் இரு மாணவிகளும் மெழுகுவர்த்தி மற்றும் விளக்கு வெளிச்சத்தில் படித்து வருகின்றனர். மேலும் சில நேரம் அருகில் உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு சென்று படிப்பதும் அல்லது அதில் உள்ள தெரு விளக்கு வெளிச்சத்திலும் படித்து வருகின்றனர். இது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த செயல் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆதலால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இவரது வீட்டை பார்வையிட்டு உரிய மின் மின் இணைப்பு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர வலியுறுத்தியுள்ளனர்.