மழை வெள்ளத்தால் உருக்குலைந்த கோவளம் மீனவர் கிராமம்- சாலை துண்டிக்கப்பட்டதால் 40 நாட்களாக குழந்தைகள் பள்ளிக்கு செல்லாத பரிதாபம்
சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் எங்கள் கிராமத்தில் இருந்து துறைமுக பள்ளியில் படிக்கும் சுமார் 30 குழந்தைகள் கடந்த 40 நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை.
தூத்துக்குடி அருகே முள்ளக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கடற்கரை கிராமம் கோவளம் மீனவர் காலனி. 45 குடிசை வீடுகளை கொண்ட இந்த கிராமத்தில் 60 குடும்பங்களை சேர்ந்த சுமார் 300 பேர் வசித்து வருகின்றனர். மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள இந்த கிராமத்தை கடந்த மாதம் 17, 18 தேதிகளில் பெய்த அதிகனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு உருக்குலைத்துவிட்டது. இந்த கிராமத்துக்கு செல்லும் சிறிய சாலை, குடிநீர் குழாய், மின் கம்பங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
இதனால் வெளி உலகில் இருந்து இந்த கிராமம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மக்கள் வெளியே வர முடியாத நிலை உருவானது. குடிநீர், மின்சாரம் முற்றிலும் தடைபட்டது. வலைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இக்கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் கடந்த 40 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கிராம மக்கள் சிறிய தெர்மாகோலில் செய்யப்பட்ட போயா படகுகள் மூலமே வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். கடற்கரை மணல் பகுதியில் ஊற்று தோண்டி அதில் வரும் தண்ணீரை தான் குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். மழை வெள்ளம் ஏற்பட்டு 40 நாட்ளுக்கு மேலாகியும் அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை என இக்கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கோவளம் மீனவர் காலனியை சேர்ந்த மீனவர்கள் கூறும்போது, "மழை வெள்ளத்தால் அனைத்தையும் இழந்துள்ளோம். சாலை, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. போயா படகு மூலம் தான் வெளியே சென்று வருகிறோம். கடற்கரை பகுதியில் ஊற்று தோண்டி அதில் வரும் தண்ணீரை தான் குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்துகிறோம். அந்த தண்ணீர் உவர்தண்மையுடன் இருந்தாலும் எங்களுக்கு வேறு வழியில்லை.
வெள்ளத்தில் சாய்ந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு முன்பு தான் மின்சாரம் வந்தது. சாலை மற்றும் குடிநீர் குழாய் இன்னும் சரி செய்யப்படவில்லை. மீன்பிடித் தொழிலை விட்டால் எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. மீன்பிடி வலைகள் பெருமளவில் சேதமடைந்துவிட்டன. வீடுகளில் வைத்திருந்த பழைய வலைகளை பயன்படுத்தி தற்போது தொழிலுக்கு சென்று வருகிறோம். சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் எங்கள் கிராமத்தில் இருந்து துறைமுக பள்ளியில் படிக்கும் சுமார் 30 குழந்தைகள் கடந்த 40 நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை. அனைத்து வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கிறோம். அரசு தான் எங்களுக்கு கைகொடுக்க வேண்டும்" என்றார்.
எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவத்தின் கவுர செயலர் சங்கர் என்பவர் இந்த கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டு, கிராமத்தின் பரிதாப நிலையை வெளி உலகுக்கு கொண்டு வந்தார். மேலும் இதுகுறித்து எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவத்தின் கவுரவ செயலாளர் சங்கர், மழை வெள்ளம் கோவளம் கிராமத்தின் நிலை குறித்து அமைச்சர் கீதாஜீவன் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் கோவளம் மீனவர் கிராமத்தில் அமைச்சர் கீதாஜீவன் போயா படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் அப்பகுதி மக்கள், தங்களது குழந்தைகள் துறைமுக பள்ளியில் பயின்று வருவதாகவும் தற்போது 40 தினங்களுக்கு மேலாக பள்ளிக்கு செல்ல இயலாத நிலை உள்ளது என்ற அவர்கள், பிற நாட்களில் பள்ளிக்கூடம் சென்றாலும் வாரத்தில் மூன்று தினங்கள் மட்டுமே பள்ளிக்கு செல்ல முடிகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியரின் உதவியில் ஆட்டோ மூலம் குழந்தைகள் துறைமுகப் பள்ளிக்கு சென்று வருகின்றனர், ஆனால் அந்த ஆட்டோ வாரத்தில் மூன்று நாட்கள் தான் இயக்கப்படும் நிலை உள்ளது தங்கள் பகுதிக்கு பள்ளிக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து அவர்களுக்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன் பள்ளி நாட்களில் பள்ளிக்குச் செல்ல தகுந்த ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். அந்தப் பகுதியில் குடியிருப்பு கட்டி தர அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர். அது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். முள்ளக்காடு பஞ்சாயத்தின் தலைவர் கோபிநாத் நிர்மல் மழை வெள்ளத்திற்கு முன்பாக எங்களது பகுதிக்கு வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து எங்களை பாதுகாப்பாக அழைத்து சென்றதால் நாங்கள் உயிர் பிழைத்தோம் என்றனர்.
அப்பகுதி மீனவர்கள் தங்களது வாழ்வாதாரமான மீன்பிடி வலைகள் கடும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்துள்ளதாக தெரிவித்தனர் இதற்கு பதில் அளித்த அமைச்சர் விரைவில் மீன்வளத்துறை மூலம் வலைகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துக் கொண்டார் தற்போது மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட சாலை சீரமைக்கப்படும் விரைவில் தார் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் உறுதியளித்தார்.