குப்பை கிடங்கில் பயோ டைவர்சிட்டி பார்க்கா?; சாதித்து காட்டிய தூத்துக்குடி மாநகராட்சி
தூத்துக்குடி பகுதியில் முன் எப்போதும் இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த காடு, பறவைகள், விலங்குகளுக்கு புகலிடமாக மாறியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான தருவைகுளம் குப்பை கிடங்கு முன்பு துர்நார்ற்றத்துடன் புகை மண்டலமாக காட்சியளித்த நிலையில் இன்று அடர் வனமாக மாறி பறவைகள், விலங்குகளுக்கு புகலிடமாக மாறியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு தூத்துக்குடியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை செல்லும் வழியில் அய்யனார்புரம் பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பை கிடங்கை கடந்து செல்வது என்றாலே மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டும். மேலும் இங்கிருந்து கிளம்பும் புகை கிழக்கு கடற்கரை சாலையையே மூடிவிடும். இதனால் சுற்றியுள்ள பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
இதனை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய அப்போதைய தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெயசீலன், கடந்த 2019 ஆம் ஆண்டு குப்பைக்கிடங்கில் 2 ஏக்கர் பரப்பளவில் பயோ மைனிங் முறையில் குப்பைகளை அகற்றி மரங்களை நட முடிவு செய்தார். 2 ஏக்கர் பரப்பளவில் 2 ஆயிரம் மரங்கள் நடப்பட்டன. இந்த மரங்கள் நன்கு வளரத் தொடங்கியதை தொடர்ந்து, அடுத்தடுத்து குப்பைகள் அழிக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன. இதுவரை இந்த பகுதியில் மியாவாக்கி முறையில் 130 ஏக்கரில் 1.25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இதில் 2019-ம் ஆண்டில் நடப்பட்ட மரங்கள் சுமார் 15 அடி உயரத்துக்கு வளர்ந்து சோலையாக காட்சியளிக்கிறது. இதில் கொய்யா, மாதுளை, கொடுக்காபுளி போன்ற பழமரங்கள் பலன் கொடுக்க தொடங்கியுள்ளன. பழ மரங்கள், நிழல் தரும் மரங்கள், மரத்தடி தரும் மரங்கள், காய்கறி, பூச்செடிகள், மூலிகை செடிகள் என சுமார் 300 வகையான மரங்கள் மற்றும் செடிகள் இங்கே நடப்பட்டுள்ளன. தூத்துக்குடி பகுதியில் முன் எப்போதும் இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த காடு, பறவைகள், விலங்குகளுக்கு புகலிடமாக மாறியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “மாநகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் பயோ டைவர்சிட்டி பார்க் அமைக்க மாநகராட்சி சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக வல்லுநர் குழு மூலம் இந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த பகுதியில் மரம், செடி கொடிகள் சரியாக வளராது. உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை என வல்லுநர் குழுவினர் தெரிவித்தனர். ஆனால், அந்த கருத்து தவறானது என்பதை தற்போது நிருபித்திருக்கிறோம். இங்கு மரம், செடி, கொடிகள் மிக மிக நன்றாக செழித்து வளருகின்றன. அதன் மூலம் பல உயிரினங்களுக்கு இப்பகுதி புகலிடமாக மாறியுள்ளது.
ஏராளமான மயில்கள் இங்கே வாழ்கின்றன. அவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்க ஏற்ற பகுதியாக இந்த இடத்தை தேர்வு செய்துள்ளன. ஏராளமான பறவைகள் இங்கு வாழ்கின்றன. மேலும், முயல், எலி, பாம்பு போன்ற வனவிலங்குகளும், ஏராளமான சிறிய உயிரினங்களும் இங்கு காணப்படுகின்றன.மரங்கள், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க ஏதுவாக மாநகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரை உபயோகித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர், ஆணையர் ஆகியோர் மரக்கன்று நடுவதில் மிகுந்த ஆர்வத்தோடு ஊக்கப்படுத்தியதால் வனத்துறை மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், மாணவர் சங்கங்கள். இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பக்கபலமாக இருந்து உதவிகளை செய்து வருகின்றனர். அனைவரின் கூட்டு முயற்சியால் தான் இந்த காட்டை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடி நகரை பசுமையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மாநகராட்சி நிர்வாகம், கடந்த ஆண்டு பொறுப்பேற்று 2-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாநகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் 70 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாடு செய்தார்.இந்த ஆண்டு 3-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு 71 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை கடந்த மாதம் தொடக்கத்தில் மேயர் தொடங்கி வைத்தார். அந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அன்றைய குப்பைமேடு இன்று சோலையாக உருமாறி உள்ளது. விரைவில் பறவைகளின் வேடந்தாங்கலாக மாறும் நிலை ஏற்படும் என்பதே உண்மை.