ஆழ்கடலில் உபயோகிக்கப்படும் ஏர் - கம்ப்ரசர்களால் உயிருக்கு ஆபத்து - எச்சரிக்கும் மீனவர்கள்
வேம்பார் கடல்பகுதியில் சட்ட விரோதமாக கேஸ் சிலிண்டர் - AIR COMPRESSOR-களை கொண்டு ஆழ்கடலில் கனவா மீன்கள் வேட்டை - வாழ்வாதாரம் இழந்து நிற்கும் 500 மீனவ குடும்பங்கள்.
தென்தமிழகத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கிராமத்தில் மீன்பிடித் தொழிலையே பிரதான தொழிலாகக் கொண்டு நூற்றுக்கணக்கான மீனவர்கள் நாட்டுப்படகுகள், விசைப்படகுகள் மற்றும் தூண்டில் மூலம் மீன்களைப் பிடித்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வேம்பார் கடற்கரை பகுதி என்பது மன்னார் வளைகுடாவில் ஒரு பகுதியாகும். இங்கு பவளப்பாறைகள் அதிகம் வேம்பார் பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் கனவா மீன்களை மட்டுமே தூண்டில் மூலம் பிடித்து தங்களது குடும்பத்தை நடத்தி வருகின்றனர். நாட்டுப் படகு மூலமாக கடல் பகுதிக்குச் சென்று போயா என்று தெர்மகோல் படகில் சென்று தூண்டில் போட்டு கனவா மீன்களை பிடித்து வருகின்றனர்.
வழக்கமாக இப்பகுதியில் உள்ள மீனவர்கள் தூண்டில் மூலம் குறைவான அளவு கனவா மீன்களை பிடித்து தொழில் செய்து வந்த நிலையில் இவ்வாறு AIR COMPRESSOR-களைக் கொண்டு சுவாசித்து ஆழ்கடலுக்கு சென்று மிக அதிக அளவிலான கனவா மீன்களை பிடித்து வருவதால், இந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதோடு இப்பகுதியில் கனவா மீன்களின் இனப்பெருக்கமும் பாதிக்கப்படும் சூழ்நிலை உண்டாகிறது என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி, சட்ட விரோதமாக உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் இவ்வாறு ஏர் கம்ப்ரசர்கள்(AIR COMPRESSOR) மூலம் சுவாசித்து ஆழ்கடலுக்கு செல்லக்கூடிய மீனவர்கள் பல்வேறு கடல் உயிரினங்களையும், பவளப்பாறைகளையும் சேதப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மீனவர்களுக்கிடையே சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் முன்பாக உடனடியாக சட்டவிரதமாக ஆழ்கடலுக்குச் சென்று கனவா மீன்களை வேட்டையாடும் இந்த கும்பலின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, மிகவும் உயிருக்கு ஆபத்தான முறையில் AIR COMPRESSOR-மூலம் சுவாசித்து ஆழ்கடலுக்குச் செல்லும் முறையை தடை செய்து உத்தரவு பிறப்பித்து இந்தப் பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மேம்பாடு மீனவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை இணை இயக்குனர் மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர்.
ஆனால், மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், தொடர்ந்து சட்ட விரோதமாக ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் கும்பல் அனைத்து கனவா மீன்களையும் வேட்டையாடிச் சென்று விடுவதால் கடலுக்கு செல்லும் இப்பகுதியை சேர்ந்த கனவா மீன்பிடி தொழிலாளர்கள் ஏமாற்றத்துடனே வீடு திரும்புவதாகவும், இதனால் சில நாட்களாக கடலுக்குச் செல்லவே இல்லை என்கின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள். அத்தோடு, சட்டவிரோதமாக ஏர் கம்ப்ரஸர்களை கொண்டு சுவாசித்து ஆள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க தாமதிக்கும்பட்சத்தில், கடலுக்குள் இறங்கி போராட்டம், சாலை மறியல், ஆதார், ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம் என பலகட்ட போராட்டங்களை மேற்கொள்ள விருப்பதாகவும் மீனவர்கள் அரசுக்கு எச்சரிக்கை எடுத்துள்ளனர்.