Thoothukudi Floods: தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் எடப்பாடி பழனிசாமி
அத்தியாவசிய பொருட்களான பால், தண்ணீர் உள்ளிட்டவைகள் கிடைக்காததால் பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடித்த வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. சனிக்கிழமை காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மேலும் அதிகரித்து, பலத்த மழையாக பெய்தது. உப்பாற்று ஓடையில் அதிக நீர் வரத்து வந்ததை தொடர்ந்து கோரம்பள்ளம் குளத்தின் 24 கண் மதகுகள் திறக்கப்பட்டு உப்பாற்று ஓடை வழியாக கடலுக்கு திருப்பி விடப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் காலாங்கரை அருகே உடைப்பு ஏற்பட்டது. மேலும் தூத்துக்குடி மாநகரில் மழை நீர் உட்புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர். நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரும் வழியில் முறப்பநாட்டில் அதிக தண்ணீர் வரத்து ஏற்பட்டதால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
தூத்துக்குடி - பாளையங்கோட்டை செல்லும் சாலை, பெரிய ஆஸ்பத்திரி, அண்ணாநகர், தபால் தந்தி காலனி, ஆதிபராசக்தி நகர், முத்தம்மாள் காலனி, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளை மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. தூத்துக்குடி நகரில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே நேற்று மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகளுக்கு இதுவரை மின் விநியோகம் சரி செய்யப்படாததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். வெள்ள நீர் மெல்ல மெல்ல வடியத் துவங்குகிறது. மேலும் அத்தியாவசிய பொருட்களான பால், தண்ணீர் உள்ளிட்டவைகள் கிடைக்காததால் பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை, வெள்ள சேதங்களை பார்வையிட தூத்துக்குடி வந்த அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி , தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து அரசி, பருப்பு, பால், பிஸ்கட் உள்ளிட்ட தொகுப்பை வழங்கினார். தொடர்ந்து தூத்துக்குடி பக்கிள் ஓடையில் வெள்ள நீர் செல்வதை பார்வையிட்டார். அப்பகுதியை சேர்ந்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியிடம், மழை வெள்ளத்தினால் வீடுகளை விட்டு வெளியே செல்ல இயலாமலும் உணவுக்கு திண்டாடி வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகளிடம் உணவு வழங்க ஏற்பாடு செய்ய கேட்டு கொண்டார். தொடர்ந்து அங்கு பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட அவர் அங்கிருந்து நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க புறப்பட்டுச் சென்றார்.