தூத்துக்குடி விவசாயிகள்: வெள்ள நிவாரணம், பயிர் காப்பீடு வேண்டி பிச்சை எடுத்து போராட்டம்!
வெள்ள நிவாரணம், பயிர் காப்பீடு கோரி பிச்சை எடுத்துக் கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் போராட்டம்.

வெள்ள நிவாரணம், பயிர் காப்பீடு கோரி பிச்சை எடுத்துக் கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவை தூத்துக்குடி ஆட்சியரிடம் கொடுத்தனர். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு புரட்டாசி ராபி பருவத்தில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், பருத்தி ,மிளகாய் கொத்தமல்லி ,வெங்காயம் போன்ற பல்வேறு பயிர்கள் பயிர் செய்தனர். சராசரியாக பெய்த மழைக்கு பயிர்களை சுற்றி முளைத்த களைகள் பறித்து, உரமிட்டு, நோயினால் பாதிக்கப்பட்ட பயிர்களை காக்கவும், நன்கு வளர்ச்சியடைவும் மருந்து தெளித்தனர். இதனால் செடிகள் நன்கு வளர்ந்தன. உழவுசெய்யகளை பறிக்க, மருந்து தெளிக்க, உரமிட என ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் வரை செலவு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெஞ்ஞல் புயலால் வடமாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது போல் கடந்த டிசம்பர் மாதம் 12 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பெய்த கன மழைக்கு தூத்துக்குடி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டது.

அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து, பாசி, சோளம், மக்கா, சின்ன வெங்காயம் , கொத்தமல்லி, மிளகாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்தனர். புயல் பாதிப்பு குறித்து அரசு பார்வையிட்டு சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கடந்த ஜனவரி மாதம் விவசாயிகளிடம் பயிர் அடங்கல், வங்கி புத்தக நகல், பட்டா, ஆதார் போன்றவற்றை கிராம நிர்வாக அலுவலர்களால் பெறப்பட்டது. கடந்த நவம்பர் ஏற்பட்ட பெஞ்ஞல் புயலுக்கு பாதிக்கப்பட்ட வட மாவட்ட விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் விடுவிக்கப்பட்டு விட்டது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தது. நிவாரணம் வழங்க விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஏழு மாதங்ளாகியும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வில்லை. இந்நிலையில் அறுவடை செய்யப்பட்டு பயிர்கள் இல்லாத நிலங்களை அடுத்த ஆண்டு பருவத்திற்கு தயார் செய்ய விவசாயிகளிடம் பணம் இல்லை, உழவு செய்ய முடியவில்லை. தவிர 2024 - 2025 விவசாயிகள் அனைத்து பயிர்களுக்கும் பயிர் காப்பீடு செய்தனர். அருகில் உள்ள தெற்காசி மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கடந்த வாரம் விடுவிக்கப்பட்டுள்ளது. அதனால் தூத்துக்கு டி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி 2024 - 2025 பயிர் காப்பீடு உடனடியாக விடுவிக்க வேண்டும். தவிர அரசு விவசாயிகளுக்கு கால தாமதப்படுத்தாமல் வெள்ள நிவாரணத்தொகையை உடனடியாக விடுவிக்கக்கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன் தரையில் துண்டை விரித்து பிச்சை எடுத்தும், நிவாரணம் வழங்கக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்திற்கு கயத்தார் எக்ஸ் வைஸ் சேர்மன் ஜெயச் சந்திரன் தலைமை வகித்தார். கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன், மேல நம்பிபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் தனவதி, கடலையூர் மாரிச்சாமி, தமாகா மாவட்ட தலைவர் ராஜகோபால், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சங்கையா, ராகவன் , ஆதிமூலம், மணியக்காரன்பட்டி முன்னாள் தலைவர் பெருமாள்சாமி, முத்துலாபுரம் முன்னாள் தலைவர் சங்கையா நவநீதன்உட்பட இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.





















