Thamirabarani River: ஜீவனை இழக்கும் நிலையில் வற்றாத ஜீவநதி தாமிரபரணி- குப்பைகளால் மூச்சு திணறும் நிலை
தாமிரபரணி ஆற்றில் கழிவுகளை அகற்றி மாசு குறித்து அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும், இது தொடர்பாக அரசு தன்னார்வலர்கள் அடங்கிய குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்திலேயே உருவாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் ஒரே வற்றாத ஜீவநதி தாமிரபரணி ஆறு. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு சமவெளி பகுதிகளில் 126 கி.மீ பயணித்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியில் கடலில் கலக்கிறது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் வாழ்வாதாரமாகவும் தாமிரபரணி விளங்குகிறது. இதனால் ஆற்றின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் தாமிரபரணி கரையோரத்தை திறந்தவெளி கழிப்பிடமாக்குவதும், சில இடங்களில் கழிவு நீரும் தாமிரபரணியில் கலக்கும் அவல நிலை உள்ளது. மேலும் தாமிரபரணியை கழிவுகளை கொட்டியும் குப்பை தொட்டியாக மாற்றும் அவல நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில் தான் கடந்த டிசம்பர் மாதம் 17, 18 ஆம் தேதிகளில் நெல்லை மாவட்டத்தில் பெய்த அதிக கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தாமிரபரணி ஆற்று பகுதியான நெல்லை மாவட்டம் மட்டுமல்ல, தன் தடம் பதிக்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தூத்துக்குடி நெல்லை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கரையோரப் பகுதிகளும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வெள்ளப்பெருக்கின் போது முட்செடிகள், கொடிகள், மரக்கட்டைகள், மரங்கள், குப்பைகள் கழிவுகள் என மொத்தமாக அடித்து வரப்பட்டு தாமிரபரணியை ஆக்கிரமித்து உள்ளது.
மழை தணிந்து ஆற்றில் வெள்ளமும் தணிந்தது. ஆனால் குப்பைகள் தாமிரபரணி ஆற்றை சூழ்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆறு துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக ஆற்றில் குளிக்க வருபவர்களும் மிகவும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. கடும் மழை வெள்ளம் பாதித்து ஒரு மாத காலமாகியும் ஆட்சி கரைகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் முன்வரவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து இயற்கை ஆர்வலரான முத்துராமனிடம் கேட்டபோது, வற்றாத ஜீவனதியான தாமிரபரணி ஆற்றில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கழிவுகள் அனைத்தும் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் பொருநைக்கு விழாக்கள் எடுக்கும் சூழலில் கழிவு நீரும் குப்பைகளும் தாமிரபரணி ஆற்றில் கலக்காமல் இருக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வற்றாத ஜீவ நதியை காப்பாற்ற வேண்டும் எனக் கூறும் அவர் தாமிரபரணி ஆற்றில் கழிவுகளை அகற்றி மாசு குறித்து அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும், இது தொடர்பாக அரசு தன்னார்வலர்கள் அடங்கிய குழுவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் எனக்கூறிய முத்துராமன் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்க உள்ளதாக தெரிவித்தார்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )