திராவிடத்தின் தனித்தன்மையை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் தூத்துக்குடிதான்- கனிமொழி
தூத்துக்குடி மாவட்டம் கலை இலக்கியத்தில் மட்டுமின்றி சுதந்திர போராட்ட தியாகிகள் பல்வேறு வரலாற்று அறிஞர்கள் கொண்ட மாவட்டமாக இருந்துள்ளது என்பதையும் பல்வேறு சான்றுகள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடியில் ஐந்தாவது புத்தக கண்காட்சியை பாராளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடியில் ஐந்தாவது புத்தக திருவிழா மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடங்கியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள சந்திரப்பேரி பகுதியில் நடைபெற உள்ள இந்த புத்தக கண்காட்சி இன்று துவங்கி வருகிற 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற திமுக குழு தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த புத்தக கண்காட்சியை திறந்து வைத்து புத்தக அரங்குகளை பார்வையிட்டனர்.
இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, சமஸ்கிருதம் படிச்சா தான் இந்தியாவையே புரிஞ்சிக்க முடியும். சமஸ்கிருதம் தான் இந்தியா என்ற கருத்தை பரப்பிக் கொண்டிருந்த சமயத்திலே முதல் முதலாக அதற்கு எதிராக எழும்பிய குரல் தூத்துக்குடியில் இருந்து ஒலித்த கால்டுவெல் குரல் தான் எனவும் திராவிடத்தின் தனித்தன்மையை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் தூத்துக்குடி மாவட்டம் தான். நமது வாழ்க்கையை புரிந்துகொள்ள புத்தகங்களை படிக்க வேண்டும் ஆராய்ச்சியாக இருந்தாலும் ஆய்வு கட்டுரைகளாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் புத்தகங்கள் படிப்பது தான் சிறந்த வழி எனவும் தூய்மை பாரதத்தைப் பற்றி தற்போது நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிதர்சனத்தில் மனிதர்கள் புரிந்து கொள்ளும் புத்தகங்களை படித்தால் மட்டுமே பிரச்சனைகளை சரி செய்ய முடியும், இதன் மூலமாகவே எந்த திட்டத்தையும் முறையாக செயல்படுத்த முடியும். இதனால்தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் அதிகளவிலான புத்தகங்களை படித்தார்கள். வாசிப்பின் வழியாக எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் கீழே இருக்கக்கூடிய மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்த முடிந்தது எனவே வாசிப்பை நாம் அனைவரும் மேம்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்க தென்னரசு, திராவிடம் என்ற சொல் இன்று நேற்று தோன்றியதல்ல பண்டைய காலத்தில் நம்மாழ்வார் எழுதிய பாடல்களில் திராவிடம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது என பல்வேறு புத்தக சான்றுகளுடன் தெரிவித்தார். மேலும் தூத்துக்குடி மாவட்டம் கலை இலக்கியத்தில் மட்டுமின்றி சுதந்திர போராட்ட தியாகிகள் பல்வேறு வரலாற்று அறிஞர்கள் கொண்ட மாவட்டமாக இருந்துள்ளது என்பதையும் பல்வேறு சான்றுகள் தெரிவிக்கின்றன எனவும் முதல் முதலாக இந்தியாவிலேயே அகழ்வாராய்ச்சி நடந்த இடம் ஆதிச்சநல்லூர் என்று குறிப்பிட்டார். மேலும் 3500 ஆண்டுகளுக்கு முன்பாக மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அடையாளங்கள் இந்த பகுதியில் கிடைத்துள்ளது. அதிலும் தங்கத்தில் ஆன பொருள்களும் கிடைத்துள்ளது இதன் மூலம் மூத்த குடிகள் இங்கே வாழ்ந்ததற்கான அடையாள சான்றுகளாகவே இவை உள்ளன என தெரிவித்தார்.