Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’சிபி ராதாகிருஷ்ணன் முதன்முறையாக மாநிலங்களவை சபாநாயகராக அவையை நடத்தவுள்ள நிலையில், தமிழ்நாடு சார்ந்த பிரச்னைகளை அவர் எப்படி கையாளப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது’

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு பிரச்னைகளை முன் வைத்து அவையை முடக்க திமுக திட்டமிட்டிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இன்று தொடங்கும் கூட்டத் தொடர்
இன்று தொடங்கும் கூட்டத் தொடர் வரும் 19ஆம் தேதி வரை 15 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி தீவிர வாக்காளர் சிறப்பு சீர்திருத்தம் எனப்படும் SIRஐ தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருவது குறித்து பிரச்னைகளை எழுப்பி, அவையை முடக்க திமுக, திரிணாமுல், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக, இந்த தீவிர வாக்காளர் சீர்த்திருத்தம் பாஜகவிற்கு ஆதரவாக நடைபெறுவதகவும் தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுத்து பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் தந்திரமாக இந்த SIR யை பாஜக பயன்படுத்துவதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து அவையில் பிரச்னைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிகள் முடிவுஎடுத்துள்ளர்.
நெல் ஈரப்பதத்தை உயர்த்தாதது குறித்து கேள்வி
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் பெய்து வரும் கன மழையால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையில் நனைந்து மூட்டை, மூட்டைகளாக முளைத்துக் கிடக்கின்றன. நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17%லிருந்து 22%மாக உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மத்திய பாஜக அரசுக்கு வலியுறுத்திய நிலையில், மத்திய அரசு அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வந்து ஆய்வு செய்தனர். ஆனால், நெல்லின் ஈரப்பத அளவை மத்திய அரசு 22 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு மறுத்துவிட்டது. இதனை சில நாட்களுக்கு முன்னர் கடுமையாக கண்டித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விவசாயிகளின் நண்பன் போல் பிரதமர் மோடி முகமூடி அணிந்து தமிழ்நாட்டிற்கு வருவதாகவும், உண்மையிலேயே விவசாயிகளை மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நெல் கொள்முதல் விவகாரம், தமிழ்நாடு அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதி, மழை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணம் உள்ளிட்டவைகளை முன் வைத்து திமுக மற்றும் அதன் தோழமை கட்சியினர் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பவுள்ளனர் .
சிபி ராதாகிருஷ்ணன் சபாநாயகராக மாநிலங்களவையை நடத்துகிறார்
துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான ஜக்தீப் தங்கர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய துணை குடியரசுத் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று முதன்முறையாக மாநிலங்களவை சபாநாயகராக அவர் அவையை நடத்தவுள்ளார். ஜக்தீப் தங்கர் ராஜினாமா செய்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்த நிலையில், அவருடைய ராஜினமா குறித்தும் அவையில் கேள்விகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன. விடுமுறையை கழித்து 15 நாட்கள் மட்டுமே நடைபெறவுள்ள இந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் புதிய 14 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.






















