தூத்துக்குடியில் பசுமை தாமிரம் தொழிற்சாலை.. வேதாந்தாவிற்கு அனுமதி - தொழில்துறையினர் வரவேற்பு
Vedanta: தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள பசுமை தாமிரம் (Green Copper) தொழிற்சாலை தொடர்பாக, வேதாந்தா நிறுவனத்திற்கு அதிகாரபூர்வ விண்ணப்பம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Vedanta: தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள பசுமை தாமிரம் (Green Copper) தொழிற்சாலைக்கு, விண்ணப்பம் அளிக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்து இருப்பதை தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.
தூத்துக்குடி பசுமை தாமிரம் ஆலை:
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள பசுமை தாமிரம் (Green Copper) தொழிற்சாலை தொடர்பாக வேதாந்தா நிறுவனத்திற்கு அதிகாரபூர்வ விண்ணப்பம் அளிக்க அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை தொழில்துறை தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்த தீர்ப்பு சுத்தமான தொழில்துறைக்கு ஆதரவாகவும், பிராந்திய பொருளாதார மீட்பிற்கும், இந்தியாவின் தாமிரத் துறையில் உள்ள இலக்குகளை அடைவதற்கும் உதவும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில், வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிரம் பிரிவிற்கு, அதன் பசுமை தாமிரத் தொழிற்சாலை முன்மொழிவு தொடர்பாக தகுதியான அதிகாரிகளிடம் புதிய விண்ணப்பம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மணிந்திர மோஹன் ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, இந்த மனுவை 2019ஆம் ஆண்டின் மனுவுடன் இணைத்து 2026 ஜனவரி 29ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டது. மேலும், “நிலுவையில் உள்ள மனு, மனுதாரர் புதிய விண்ணப்பம் அளிப்பதற்கு தடையாக இருக்காது என்றும் அந்த விண்ணப்பத்தின் மீது உரிய அதிகாரிகள் முடிவு எடுக்கலாம்” என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவு, புதிய தொழில்நுட்பங்களுடன் மறுவடிவமைக்கப்பட்ட உற்பத்தி முறைமையை ஒழுங்குபடுத்தும் அதிகாரிகள் பரிசீலிக்க வழிவகுக்கும் ஒரு புதிய தொடக்கம் எனக் கருதப்படுகிறது. மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்னணு சாதனங்கள் மற்றும் கட்டமைப்பு துறைகள் போன்றவை காரணமாக இந்தியாவில் தாமிரத்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்த தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
தீர்ப்பிற்கு வரவேற்பு
இந்த தீர்ப்பை வரவேற்று, பினர்ஜி டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஸ்ரீகாந்த் ராஜகோபாலன் வெளியிட்ட அறிக்கையில், “சுத்தமான தாமிர உற்பத்தியை நோக்கி மேற்கொள்ளப்படும் இந்த மாற்றம், ஒரு தொழிற்சாலையை மட்டும் அல்லாது, நாட்டின் உள்நாட்டு வழங்கல் வலிமையையும் நீண்டகால தொழில்துறை வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.
பசுமை தாமிரம் என்றால் என்ன?
பசுமை தாமிரம் என்பது குறைந்த உமிழ்வுகள், குறைந்த கழிவுகள், மேம்பட்ட நீர் மற்றும் ஆற்றல் திறன் கொண்ட, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற முறைகளில் உற்பத்தி செய்யப்படும் தாமிரத்தை குறிக்கிறது. இந்த மாற்றத்தின் கீழ், ஸ்டெர்லைட் தாமிரம் நிறுவனம் முழுமையாக கனிமக் குவியல்களை அடிப்படையாகக் கொண்ட உருக்குமுறையிலிருந்து, 70 சதவீத கனிமக் குவியல்கள் மற்றும் 30 சதவீத மறுசுழற்சி தாமிரத்தை பயன்படுத்தும் கலப்பு உற்பத்தி முறைமைக்கு மாற திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாடுகளிலிருந்து மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த கலப்பு உற்பத்தி முறைமை, குறைந்த கார்பன் வெளியீடு கொண்ட மறுசுழற்சி தாமிரத்தையும், முதன்மை கனிமத் தாமிரத்தையும் இணைத்து, சுற்றுச்சுழல் பொருளாதாரம் (Circular Economy) நடைமுறையை ஊக்குவிப்பதுடன், பாரம்பரிய உருக்குமுறைகளை விட மிகக் குறைந்த சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அம்சங்களைத் தாண்டி, இந்த திட்டம் உள்ளூர் மக்களின் நலன்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. அருகிலுள்ள கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை பகிர்ந்து வழங்குதல், உள்ளூர் மேலாண்மை குழு மூலம் சமூக பங்கேற்பை உருவாக்குதல், மற்றும் நீடித்த உள்ளூர் வளர்ச்சிக்காக தனிப்பட்ட நிதியை ஒதுக்குதல் போன்ற திட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
”வாழ்வாதாராத்தை மீட்டெடுக்கும் தீர்ப்பு”
இதுகுறித்து தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எஸ். தியாகராஜன் கூறுகையில், “இந்த முன்மொழியப்பட்ட தொழிற்சாலை, இப்பகுதியில் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கும் திறன் கொண்டது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழில்துறையை சார்ந்தே உள்ளன. சுத்தமான தொழில்நுட்பத்துடன் தொழிற்சாலை மீண்டும் தொடங்கினால், நேரடி வேலைவாய்ப்புகள் மட்டுமல்லாது, துணைத் தொழில்களுக்கும் பெரும் ஆதரவாக அமையும்” என்றார். இந்த வளர்ச்சியை தேசிய அளவிலான சூழலில் வைத்து பேசுகையில், இந்திய சர்வதேச தாமிர சங்கத்தின் உறுப்பினர் மயூர் கர்மார்கர்,
“கார்பன் குறைப்பு நோக்கில் செல்லும் பொருளாதாரத்திற்கு தாமிரம் மிகவும் அவசியமானது. நிலையான வழங்கல் இல்லாவிட்டால், விலை ஏற்றத்தாழ்வுகள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும். சுற்றுச்சூழலுக்கு பொறுப்புடன் உற்பத்தி செய்யப்படும் தாமிரமே இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிர்கால பாதை” என்று தெரிவித்தார்.





















