Thoothukudi : ”விவசாயிகள் அருமை தெரியுமா உங்களுக்கு?” காப்பீட்டு நிறுவன அதிகாரியை லெஃப்ட் ரைட் வாங்கிய கலெக்டர்..!
பயிர் செய்த கணக்கிட்டு முறையாக நடைபெறவில்லை,காப்பீட்டு நிறுவனம் விவசாயிகளில் வஞ்சித்து வருகிறது புகார் தெரிவித்த விவசாயிகள்.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், வேளாண்மை இணை இயக்குனர்(பொறுப்பு) அல்லிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காப்பீடு தொகை
அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வேளாண்மை சார்ந்த திட்டங்களை விவசாயிகளுக்கு அச்சிட்டு வழங்க வேண்டும், கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையால் பயிர்கள் முழுமையாக சேதம் அடைந்து உள்ளன. பயிர் காப்பீட்டு தொகை ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 பிர்க்காவில் மிகவும் குறைவாக காப்பீடு தொகை வந்து உள்ளது. பயிர் காப்பீட்டுக்கான கணக்கெடுப்புக்கு வரும் போது, அந்த குழுவில் உள்ளவர்கள் ஆட்சேபனை தெரிவித்தாலும், இன்சூரன்சு நிறுவனம் அதனை ஏற்பது இல்லை. மழை காரணமாக உளுந்து கெட்டுபோய்விட்டது. ஆனால் அதனை நல்ல உளுந்து என்று கணக்கெடுத்து உள்ளனர். ஆகையால் பிரிமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தான்குளம் செட்டிகுளத்தில் இருந்து பன்னம்பாறை செல்லும் ரோட்டில் மணிமுத்தாறு கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மூடப்பட்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆகையால் அந்த பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகையை மீட்டுத்தர வேண்டும். கடம்பாகுளம் பகுதியில் வெள்ளத்தில் வயல்களில் மண்தேங்கியது. அந்த மண் தற்போது அகற்றப்பட்டு உள்ளது. ஆனால் அந்த வயல்களுக்கு தற்போது அரசு வண்டல் மண் அடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்பட்டி
பனங்கருப்பட்டியில் இனிப்பு குறைவாக இருப்பதாக கூறி, தரம் குறைந்த கருப்பட்டி என்று உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்து உள்ளார். தரமான கருப்பட்டிக்கு இனிப்புத்தன்மை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும். இதனால் கருப்பட்டி விற்பனை பாதிக்கப்படுகிறது என்று கூறினர்.
ஆட்சியர் இளம்பகவத்
கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைக்கு பதில் அளித்த ஆட்சியர் இளம்பகவத்,பொதுவாக விவசாயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அரசும், அரசு கூறும் தீர்வுகளுக்கும் எந்த மாற்றமும் இருக்காது. நானும் நெல் மற்றும் தென்னை விவசாயத்தை சார்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான். விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை என்னால் எளிதாக புரிந்து கொள்ளமுடியும். உங்களுடைய பிரச்சினைகளை துறைச் சார்ந்த அலுவலர்களுடனோ அல்லது என்னிடமோ தெரிவிக்கலாம். உங்கள் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காண முழு முயற்சிகளை எடுப்போம். உங்களுக்கு தேவையான உதவி மற்றும் கோரிக்கைகளை எங்களிடம் எப்போது வேண்டுமென்றாலும் சொல்லலாம். உங்களுடைய கோரிக்கைகளின் தீர்வுகளுக்கு முறையாக அடுத்தடுத்த கூட்டத்தில் செய்து தருவோம்.
தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்து உள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், சூரியசக்தியால் இயங்கும் பம்பு செட் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் குறைந்த அளவில்தான் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு தேவை அதிகம் இருக்கலாம் என்று நினைக்கிறேன். விவசாயிகளுக்கு தேவை உள்ளது என்றால், பயனாளிகள் விரம் கொடுத்து கூடுதலாக திட்ட பயன்களை பெறலாம். வேளாண்மை திட்டங்கள் விவசாயிகளை சென்று சேராமல் இலக்கை அடைய முடியாது. வேளாண்மை துறையின் திட்டங்கள் குறித்த விவரங்களை விவசாயிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தயார் செய்து, அதனை விவசாயிகளுக்கு 30-ந் தேதிக்குள் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைக்கப்படும்.
பயிர் காப்பீடு திட்டத்தில் வேளாண்மை துறை, புள்ளியியல் துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இன்சூரன்சு நிறுவன அதிகாரிகளுடன் சென்று கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர். இதில் யாரேனும் ஆட்சேபனை தெரிவித்தால், அந்த ஆட்சேபனைகள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் முறையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதனை உதவி இயக்குனர்(இன்சூரன்சு) முழுமையாக கண்காணிக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்சூரன்சு நிறுவனத்தினர் எந்த அரசு அலுவலரையும் கட்டுப்படுத்த முடியாது. சாத்தான்குளம் செட்டிக்குளத்தில் பாலம் அமைக்கும் பணிக்கு நெடுஞ்சாலைத்துறை தடையில்லா சான்று எப்போது வழங்கப்படும் என்ற தகவலை விரைந்து தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.