திருவாரூர் தெற்கு வீதியை கலைஞர் சாலை என பெயர் மாற்றும் தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு
டாக்டர் கலைஞர் சாலை என மாற்றுவது இந்துக்களை புண்படுத்துவதாக உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறையிடம் பாஜக மனு
திருவாரூர் நகராட்சியின் முதல் சாதாரண கூட்டம் நகரமன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் தலைமையில் நடைபெற்றது. இதில் 45க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் தனது அரசியல் வாழ்வில் இந்தி திணிப்பிற்கான முதல் போராட்டத்தை துவக்கிய திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட தேரோடும் வீதியான தெற்கு வீதியை டாக்டர் கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் திருவாரூர் நகராட்சி உள்ள 30 வார்டுகளிலும் மாஸ் கிளீனிங் செய்ய வேண்டும், திருவாரூர் கெளரிசாமி நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கழிப்பறைக் கட்டிடம் கட்டுவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. அதன் அடிப்படையில் திருவாரூர் நகராட்சியில் சொத்து வரி உயர்த்துவது குறித்து கொண்டு வரப்பட்ட 45 ஆவது தீர்மானத்தை கண்டித்து அதிமுக கவுன்சிலர் வெளிநடப்பு செய்தனர்.
திருவாரூர் நகராட்சியில் அதிமுக சார்பில் மூன்று உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அதில் 1வது மற்றும் இரண்டாவது வார்டு அதிமுக கவுன்சிலர்களான தம்பதியினர் மலர்விழி மற்றும் கலியபெருமாள் ஆகியோர் கருப்பு உடை அணிந்து நகர்மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மற்றுமொரு அதிமுக கவுன்சிலரான 10வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் மூர்த்தி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 21 வது வார்டு திமுக உறுப்பினர் சங்கர் பேசுகையில் தனது வார்டில் உள்ள சுடுகாட்டை உரிய முறையில் பராமரித்து தர வேண்டும் என்று கூட்டத்தில் பேசும்போது எனக்கும் அங்குதான் இடம் இருக்கிறது. என்னையும் அங்கு தான் புதைக்க வேண்டும் சுவாரசியமாக பேசியதால் சிறிது நேரம் சலசலப்பும் கூட்டத்தில் சிரிப்பலையும் உருவாக்கியது.
திருவாரூர் நகர் மன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தெற்கு வீதியை டாக்டர் கலைஞர் சாலையாக மாற்ற கோரும் தீர்மானத்திற்கு திருவாரூர் மாவட்ட பா.ஜ.க.வினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரனிடம் திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில் தொன்மை வாய்ந்த உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தேரோடும் வீதிகளில் ஒன்றான தெற்கு வீதியை அரசியல் காரணம் காட்டி டாக்டர் கலைஞர் சாலை என மாற்றுவது இந்துக்களை புண்படுத்துவதாக உள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்