ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு புதிய கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை - திருவாரூர் ஆட்சியர்
எண்ணெய் கிணறு சிறு துறப்பன கருவிகள் மூலம் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் பழுது நீக்கும் பணிகளுக்காக மட்டுமே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய கிணறு அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு புதிய கிணறுகள் அமைத்திட எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படவில்லை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கூறியுள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் விளைநிலங்களுக்கு அடியில் குழாய் பதித்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இந்த நிலையில் விவசாய நிலங்களில் குழாய் பதித்து கச்சா எண்ணெய் ஹைட்ரோ கார்பன் ஷெல் கேஸ் உள்ளிட்டவை எடுக்கக் கூடாது என தொடர்ந்து ஓஎன்ஜிசிக்கு எதிராக விவசாயிகள் போராடி வந்த நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து புதியதாக ஓஎன்ஜிசி நிறுவனம் கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் செயல்படுத்தாது என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் திருவாரூர் அருகே தியானபுரத்தில் இரண்டு இடங்களில் கிணறு அமைத்து கடந்த 2019 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் எரிவாயு ஆகியவை எடுத்து வந்த நிலையில் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் மீண்டும் அதே இடத்தில் ஓஎன்ஜிசி கிணறை திறந்து புதிய பணிகளை மேற்கொண்டு வருகிறது இதற்கு விவசாயிகள் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பின்னர் மீண்டும் ஓஎன்ஜிசி நிர்வாகம் இந்த பணிகளை தொடங்கக்கூடாது. இதற்கு மாவட்ட நிர்வாகம் ஒருபோதும் அனுமதி அளிக்கக் கூடாது .இவர்கள் பணிகளை தொடர்ந்து நடத்தினால் எங்களுடைய விவசாய நிலங்கள் முற்றிலுமாக பாதிக்கப்படக்கூடும் ஆகையால் தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி ஓஎன்ஜிசி விவாகரத்தில் ஒற்றை நிலைப்பாடை தெளிவுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் தியானபுரம் பகுதியில் 2019 ல் பணிகளை நிறுத்திவிட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் சென்ற நிலையில் மீண்டும் எண்ணெய் கிணற்றில் ஓஎன்ஜிசி நேற்று துரப்பன பணிகளை தொடங்கியது. இதற்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக இன்று விவசாய அமைப்பினர் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் மக்கள் அதிகாரம் தமிழக வாழ்வுரிமை உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இந்தப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் மனு அளித்துள்ளனர்.
இந்த மனுவில், திருவாரூர் அருகே தியானபுரம் பகுதியில் பழைய கிணறுகளை புதுப்பிக்கிறோம் என்கிற பெயரில் ஓஎன்ஜிசி அதன் பணிகளை தொடங்குகிறது. குறிப்பாக தண்டலை ஊராட்சி தியானபுரம் கிராம பகுதியில் அதற்கான பணிகளை துவக்குவதற்கான உபகரணங்களை இறக்கி வருகிறது. இது 2020ல் நிறைவேற்றப்பட்ட காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்திற்கு எதிரானது என்றும் இதனை உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவாரூர் அருகே தியானபுரம் கிராமத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டு இரண்டு எண்ணெய் கிணறுகள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் எண்ணெய் கிணறு சிறு துறப்பன கருவிகள் மூலம் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் பழுது நீக்கும் பணிகளுக்காக மட்டுமே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய கிணறு அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு புதிய கிணறுகள் அமைத்திட எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படவில்லை. மேலும் ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மட்டுமே எடுத்து வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.