திருவாரூர்: பெரியகுடி ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பெரியகுடி எண்ணெய் கிணறை நவீன கருவிகளுடன் சரியான முறையில் மூடிட உத்தரவிட்டுள்ளதுடன், அந்த எண்ணை கிணற்றில் வேறு எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது எனவும் தற்போது உத்தரவிட்டுள்ளார்
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட காவிரி படுகையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் விலை நிலங்களில் குழாய் பதித்து கச்சா எண்ணெய் மற்றும் சேட் மீத்தேன் உள்ளிட்ட எரிவாயுகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கமலாபுரம், ஏற்காட்டூர், கலப்பால், அடியக்கமங்கலம், பெரிய குடி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் எண்ணெய் கிணறு அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிகளை ஓஎன்ஜிசி நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் விலை நிலங்களில் குழாய் பதிப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு விவசாய நிலம் முழுவதுமாக பாதிக்கப்படுகிறது எனக்கூறி டெல்டா மாவட்டங்களில் இருந்து ஓஎன்ஜிசி வெளியேற வேண்டும் என வலியுறுத்தி கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆட்சியில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து இந்தப் பகுதியில் புதியதாக எண்ணெய் கிணறு அமைக்கவோ அல்லது விவசாய நிலங்களில் குழாய் பதிக்கவோ கூடாது என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் சேந்தமங்கலம் அருகே பெரியகுடி கிராமத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி என்ற கிணறு வெடித்து விபத்து ஏற்பட்டு தற்காலிகமாக விவசாயிகளின் போராட்டத்தினால் மூடப்பட்டது. இந்த நிலையில் ஹைட்ராலிக் இயந்திரங்களை மூலம் தற்பொழுது நிரந்தரமாக மூட வேண்டும் என ஓஎன்ஜிசி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் அளித்திருந்தது. அதே நேரத்தில் அந்தப் பகுதியில் ஓஎன்ஜிசி புதிய பணிகளை மேற்கொள்வதற்காக அனுமதி கேட்டு இருப்பதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட சேந்தமங்கலம் வருவாய் கிராமத்தில் உள்ள பெரியகுடி ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறில் கடந்த 2012 ல் ஏற்பட்ட அதிக அழுத்தம் கொண்ட எரிவாயு கசிவின் காரணமாக 2013ல் அப்போது உள்ள கருவிகளுடன் இந்திய எண்ணெய் எரிவாயு கழகத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனையடுத்து 10 வருடங்களுக்குப் பிறகு கடந்த ஜூலை மாதம் பெரியகுடி எண்ணெய் கிணற்றில் நவீன கருவிகளுடன் மூட அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மன்னார்குடி வட்டாட்சியர் தலைமையில் கடந்த ஜூலை 29ஆம் தேதி கருத்துக்கணிப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு விவசாயிகள் மீண்டும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்காக ஓஎன்ஜிசி நிர்வாகம் அனுமதி கேட்டுள்ளதாக கூறி மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இந்த கருத்து கேட்பு கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் ஆகஸ்ட் மூன்றாம் தேதி மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி தலைமையில் இதுகுறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அந்த கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து பெரியகுடி எண்ணெய் கிணறை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருப்பதாக விவசாய சங்கங்கள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பெரியகுடி எண்ணெய் கிணறை நவீன கருவிகளுடன் சரியான முறையில் மூடிட உத்தரவிட்டுள்ளதுடன், அந்த எண்ணை கிணற்றில் வேறு எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது எனவும் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்