கைவிட்ட பெற்ற பிள்ளைகள்; 100 வயதிலும் பட்டறை நடத்தி மனைவியை காப்பாற்றும் எனர்ஜி தாத்தா..!
தனிமையில் வாழும் இந்த தம்பதியினருக்கு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளு பேரன், பேத்திகள் என அத்தனை பேர் இருந்தும் ஆதரவற்ற நிலையில் தனித்து வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
![கைவிட்ட பெற்ற பிள்ளைகள்; 100 வயதிலும் பட்டறை நடத்தி மனைவியை காப்பாற்றும் எனர்ஜி தாத்தா..! Thiruvarur 100-Year-Old Grandman Takes Care Of Wife By Doing Metalsmith Job After Kids Abandon Them கைவிட்ட பெற்ற பிள்ளைகள்; 100 வயதிலும் பட்டறை நடத்தி மனைவியை காப்பாற்றும் எனர்ஜி தாத்தா..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/01/e03811dba146089d5ecdabd8852557a5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவாரூர் அருகே உள்ள அலிவலம் கிராமத்தில் நூறு வயதிலும் ஓய்வெடுக்க முடியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் முதியவர் பெயர் கோவிந்தராஜ். இவரது மனைவி 95 வயதான அம்சவள்ளி. நான்கு பிள்ளைகளை பெற்றும் தனித்து வாழ்ந்து வரும் அவல நிலைக்கு இந்த வயது முதிர்ந்த தம்பதியினர் தள்ளப்பட்டுள்ளனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள். வழக்கம்போல் எல்லா பெற்றோரையும் போன்றே கஷ்டப்பட்டு தங்கள் பிள்ளைகளை வளர்த்து கரை சேர்த்துள்ளனர். இதில் தற்போது இருவர் இறந்து விட்ட நிலையில் எஞ்சியிருக்கும் இருவரும் இவர்களை கண்டு கொள்வதில்லை என்று கூறுகின்றனர். தனிமையில் வாழும் இந்த தம்பதியினருக்கு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளு பேரன், பேத்திகள் என அத்தனை பேர் இருந்தும் ஆதரவற்ற நிலையில் தனித்து வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வீட்டிலேயே சிறிய கொள்ளுப் பட்டறை வைத்திருக்கும் முதியவர் கோவிந்தராஜ் தனக்கு வரும் வேலைகளான அரிவாள் செய்து தருவது போன்ற சிறிய பழுது நீக்கும் வேலைகளை செய்து கொடுத்து வருகிறார். சிலருக்கு தள்ளாத வயதில் சைக்கிளை மிதித்து சென்று வீட்டில் பொருட்களை கொடுத்து பணம் பெற்று வருகிறார். கொள்ளு பட்டறை புகையின் காரணமாக கண் பார்வை பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்த நிலையில் வேறுவழியில்லாமல் வயிற்றுப் பிழைப்பிற்காக மருத்துவரின் எச்சரிக்கையையும் மீறி அந்த புகையிலேயே வேலை செய்ய வேண்டிய நிலை அவருக்கு ஏற்படுகிறது. தனக்கு நீரழிவு ரத்த அழுத்தம் போன்றவை இருந்தும் அதையும் தாண்டி இன்னும் உழைத்து வருகிறார். தனக்கு வரும் முதியோர் உதவித் தொகையான 1,000 ரூபாய் மருந்து மாத்திரைகளுக்கே போதவில்லை என்றும் என்றாவது ஒருநாள் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு நானும் என் மனைவியும் வாழ்ந்து வருவதாகவும் முதியவர் தெரிவிக்கிறார். தங்கள் இருவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டால் கூட கிராமத்தில் உள்ளவர்கள் தான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்ப்பதாக அவர் கூறுவது வேதனையின் உச்சம்.
இந்த டிஜிட்டல் உலகத்தில் பெற்றோரை பேணிப் பராமரிக்க கூட நேரம் இல்லாமல் பெரும்பாலானோர் ஓடிக்கொண்டிருக்கின்றனர். பணம் இருப்பவர்கள் பெற்றோர்களை முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டு தங்கள் கடமையிலிருந்து தப்பித்துக் கொள்கின்றனர். இந்த தள்ளாத வயதிலும் தன்னை தனது பிள்ளைகள் கைவிட்ட நிலையிலும் தன்னை நம்பி வந்த மனைவிக்காக இந்த வயதிலும் உழைத்து கொண்டிருக்கும் இந்த முதியவரின் செயல் இப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் ஒரு சேர பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம். பிள்ளைகள் தவழும் போது நடப்பதற்கு உதவியாக இருந்து கைகள் கொடுத்த தாய் தந்தையரை தள்ளாத வயதில் தாங்கிப் பிடிக்கவில்லை என்றாலும் கண்ணீர் சிந்த விடமால் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)