தமிழர்களை புரிந்துகொள்வதற்கான அறிவில்லை - பாஜகவைச் சாடிய மு.க.ஸ்டாலின்..
தமிழ்நாட்டு மக்கள் அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு என்ற புரிதலுடன் இருப்பவர்கள் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்

தமிழ் மக்கள் அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு என்ற புரிதலுடன் இருப்பவர்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியுள்ளார். திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், தமிழர்களைப் பற்றி புரிந்துகொள்வதற்கு பாஜகவுக்கு இன்னும் நூறு வருடம் ஆகும் எனவும் தெரிவித்தார்.


இந்தியை நுழைக்கும் பாஜகவின் சதியை திமுக பார்த்துக்கொண்டிருக்காது என்றும், நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல, இந்தித் திணிப்புக்கு மட்டுமே எதிரானவர்கள் எனவும் தனது பரப்புரையில் குறிப்பிட்ட ஸ்டாலின், தமிழ் மக்களை புரிந்துகொள்வதற்கான அறிவு பாஜவினருக்கு இல்லை என்றும் விமர்சித்தார். பிரச்சாரம் நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில், எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். இதைப்போலவே சில நாட்களுக்கு முன் மக்கள் நீதிமய்யம் பொருளாளர் வீடு, அலுவலகம் என சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.





















