Salem: இனிக்க இனிக்க பேசிய இன்ஸ்டா காதலி.. ரூம் போட்டு கொலை செய்த கள்ளக்காதலன்!
சாலாவை சந்தித்து தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து அறைக்கு வந்துள்ளார். இரவு 11 மணிக்கு விடுதி வரவேற்பறையில் இருந்த பணியாளரிடம் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வருவதாக பார்த்திபன் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த இன்ஸ்டாகிராம் காதலி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அவரது காதலன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியில் கோவிந்தசாமி என்பவரது மகன் பார்த்திபன் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் தருமபுரி மாவட்டம் ஏர்கோல்பட்டியைச் சேர்ந்த சாலா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர். இருவரும் சமூக வலைத்தளம் மூலம் தங்களது உறவை வளர்த்துக் கொண்டனர்.
இதற்கிடையில் பார்த்திபனும், சாலாவும் தனியாக சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு ஏற்காட்டில் உள்ள விடுதி ஒன்றில் பார்த்திபன் அறை எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சாலாவை சந்தித்து அவரை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்து அறைக்கு வந்துள்ளார். பின்னர் இரவு 11 மணிக்கு விடுதி வரவேற்பறையில் இருந்த பணியாளரிடம் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் சென்று நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை என சொல்லப்படுகிறது. பார்த்திபனுடன் வந்த பெண்ணும் மீண்டும் அவரை காணவில்லை என விடுதி வரவேற்பரைக்கு வரவில்லை. இதனால் விடுதியில் வேலை பார்ப்பவர்கள் பார்த்திபன் எண்ணுக்கு போன் செய்து பார்த்துள்ளனர். அவரின் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது.
இதனிடையே நேற்று காலை 6 மணிக்கு சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் பார்த்திபன் பதிவு செய்திருந்த அறைக்கதவை தட்டிப் பார்த்துள்ளனர். ஆனால் வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் ஏற்காடு காவல்துறைக்கு விடுதி ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அறைக் கதவை உடைத்து பார்த்தபோது சாலா உள்ளே நிர்வாணமாக சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து பார்த்திபன் பற்றிய தகவலை திரட்டிய போலீசார் அவரை தீவிரமாக தேடினர்.
பார்த்திபன் செல்போன் எண்ணை வைத்து இருப்பிடத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமத்தில் உள்ள தனது வீட்டில் பார்த்திபன் இருப்பதை கண்டறிந்த போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது பார்த்திபன், சாலா ஆகிய இருவருக்கும் 4 ஆண்டுகள் இன்ஸ்டாகிராம் மூலம் தனது கள்ளக்காதலை வளர்த்தனர். சாலாவுக்கு இரண்டு குழந்தைகளும், பார்த்திபனுக்கு ஒரு குழந்தையும் இருப்பது தெரிய வந்துள்ளது. கள்ளக்காதலில் இருந்தபோது சாலாவுக்கு பார்த்திபன் ரூ.5 லட்சம் வரை கடன் கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடி ஏற்பட பணத்தை திரும்ப கேட்க, அவர் கொடுக்க முடியாது என கூறியுள்ளார்.
இதனால் சமாதான பேச்சுவார்த்தை நடத்த சாலாவை விடுதிக்கு அழைத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட கோபத்தில் பார்த்திபன் சாலா கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.





















