Thiruvavaduthurai Atheenam: செங்கோல் குறித்து திருவாவடுதுறை ஆதீனம் பெயரில் தவறான பதிவு - மயிலாடுதுறை எஸ்.பி.யிடம் புகார்
திருவாவடுதுறை ஆதீனம் பெயரில் போலியான செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆதீனம் சார்பில் மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் 14 -ஆம் நூற்றாண்டை சேர்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற போது சுதந்திரம் பெற்றதன் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் செய்யப்பட்ட தங்க செங்கோலை மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் கையில் கொடுத்து அதனை அப்போதைய பிரதமர் நேருவிடம் கொடுத்ததாக வரலாறு. தற்போது புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டபோது சுதந்திரத்தின் போது கொடுக்கப்பட்ட செங்கோலை திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீ அம்பலவான தேசிக பிரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட மடாதிபதிகள் பிரதமர் மோடியிடம் வழங்கினர்.
இந்நிலையில், ஒடிசாவில் சமீபத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தவறான நபர் கையில் செங்கோலை அளித்ததால் ஏற்பட்டதாக குறிப்பிடும் வகையில் ஆட்சியாளர்கள் கையில் செங்கோலை ஒப்படைத்த ஒரு மண்டலத்துக்குள் விபத்தின் காரணமாக துரு மரணங்கள் நிகழ்வது நல்லதல்ல. இது தவறானவர்கள் கையில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது என கடவுள் கொடுக்கும் நிமித்த செய்தியாக கூட இருக்கலாம் என்று திருவாவடுதுறை மடாதிபதி தெரிவித்ததாக பிரபல தனியார் தொலைக்காட்சியின் பெயரில் வெப்கார்டு வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனை அடுத்து திருவாவடுதுறை ஆதீனத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் இந்த பொய் செய்தி பரப்பப்படுவதாகவும், மத மோதலை உண்டாக்கும் வகையில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், பொய் செய்தியை பரப்பி வரும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷாவிடம் ஆதீன பொது மேலாளர் ராஜேந்திரன் நேரில் புகார் மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேணுகோபால் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனை அடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்