Child Marriage Chidambaram: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதரின் மகளுக்கு குழந்தை திருமணம்: வெளியான வீடியோ..!
Child Marriage Chidambaram: சிதம்பரம் நடராசர் கோயிலில் குழந்தைத் திருமணம் நடைபெற்றதற்கான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தங்களின் குழந்தைகளுக்குச் சட்டவிரோதமாக குழந்தைத் திருமணம் செய்துவைப்பதாகத் தொடர் புகார்கள் எழுந்து வண்ணம் இருந்தது.
இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு கடலூர் மாவட்ட சமூகநலத் துறையினர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டது. அதில் நான்கு குழந்தைகளுக்குக் குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஆளுநர் கருத்து:
இதையடுத்து, நடராஜர் கோயில் தீட்சிதர்கள், செயலாளர் ஹேமசபேசன் தீட்சிதர் உட்பட சிலரைக் கைதுசெய்தது காவல்துறை. இதைக் கண்டித்து சக தீட்சிதர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கிடையே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தீட்சிதர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
"சமூக நலத்துறை அதிகாரிகள் பழிவாங்கும் நோக்கத்தோடு சிதம்பரம் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்கள். உண்மையில் அங்கே குழந்தைத் திருமணங்கள் நடக்கவில்லை. குழந்தைகளின் பெற்றோர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். சிறுமிகள் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு இருவிரல் பரிசோதனை எனும் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டது. இந்தக் கொடுமைகளால் அந்தக் சிறுமிகளில் சிலர் தற்கொலைக்கு முயன்றனர்" என கூறி, ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதால் அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு மறுப்பு தெரிவித்தார். ஆளுநர் குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்தது.
இருவிரல் பரிசோதனை நடந்ததா? இல்லையா?
கடந்த மே மாதம் 24ஆம் தேதி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் சிதம்பரம் கோயிலுக்கு நேரடியாகச் சென்று சம்பந்தப்பட்ட தீட்சிதர்கள், வழக்கு பதிந்த காவல்துறையினர், பரிசோதனை நடத்திய மருத்துவர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.ஜி. ஆனந்த், "சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட மூன்று தரப்பினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் இருவிரல் பரிசோதனை நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், அந்தரங்க உறுப்பில் பரிசோதனை நடைபெற்றது உண்மை" எனத் தெரிவித்தார்.
ஆனால் அதன்பின்னர், தான் சொன்ன கருத்தில் இருந்து பல்டி அடித்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த், "மாண்புமிகு ஆளுநர் ரவி தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை. இது தொடர்பான அறிக்கையை ஆணையத்தின் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அதிகாரபூர்வமாக பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படும்" என ட்விட்டரில் பதிவிட்டார். இந்த விவகாரத்தில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மாற்றி மாற்றி பேசியது பல்வேறு விதமான கேள்விகளுக்கு வழிவகுத்தது.
இதற்கிடையில் விசாரணையின் போது காவல்துறை ஏற்கனவே ஆதாரங்களை திரட்டிவிட்டதாக கூறப்பட்டது. அதன் அடிப்படையில் தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் குழந்தைத் திருமணம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது. இதனையடுத்து குழந்தைத் திருமணம் நடைபெற்றதற்கான வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. ஆனால் புகைப்படம் வெளியாவதற்கு முன்னர் வரை தீட்ஷிதர்கள் தரப்பில் குழந்தைத் திருமணம் நடைபெறவில்லை என கூறிவந்தனர். புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியான நிலையில் மிகவும் கப்சிப் நிலையில் இருக்கிறது தீட்ஷிதர்கள் வட்டாரம். இந்த வீடியோ காவல்துறை விசாரணைக்கு மிகவும் உதவியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.