உலக மண் தினம்: தஞ்சையில் தூங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
’’விவசாயிகளை கண்டுகொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் துாங்கி வருவதை சுட்டிக்காட்டும் விதமாக, விவசாயிகள் துாங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்’’
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மாரநேரி கிராமத்தில் அய்யனார் ஏரிய உள்ளது. இந்த ஏரி தண்ணீரை நம்பி சுமார் 1400 ஏக்கர் விவசாயம் நடைபெறுகிறது. இந்த அய்யனார் ஏரி, ஆனந்தகாவிரி வாய்க்கால் பாசன பகுதி மற்றும் கல்லணை கால்வாய் பாசன பகுதிகளாகும். நீர் வழிப்பாதைகள், நீர் வெளியேறும் பாதைகள் அனைத்து ஆக்கிரமிக்கப்பட்டதால், ஆறுகளில் தண்ணீர் வந்தாலும், அய்யனார் ஏரி நிரம்பாத நிலையானது.இது குறித்து ஆக்கிரமிக்கப்பட்டவர்களிடம் கேட்கும், உரிய பதில் கூறாமலும், ஆக்கிரமிப்பை அகற்றாமல் அலட்சியப்படுத்தினர். பின்னர் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்தும், ஏரியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமலும், அதற்குண்டான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
மேலும் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், நிலத்தடி நீர் மட்டும் குறைந்ததால், அப்பகுதியுள்ள பெரும்பாலான ஆழ்குழாய் மோட்டாரில் தண்ணீர் வராமல் போனது.இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலனுக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக , மாரநேரியிலுள்ள 188 ஏக்கர் பரப்பளவில் உள்ள அய்யனார் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்டில் தொடர்ந்த வழக்கில், சுமார் 114 ஏக்கர் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கை விசாரிந்த நீதிபதிகள் அய்யனார் ஏரியில் ஆக்கிரமித்துள்ள 125 ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் துறை, காவல்துறை உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன் படி கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால், தமிழக அரசால் பூமி தானம் மற்றும் தியாகிகளுக்கு வழங்கிய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி 71 குடும்பங்களின் நலனையும் கருத்தில் கொள்ள பொதுப்பணித்துறை நீதிமன்றத்தில் தகவல்களை தராமல் வேண்டுமென்றே கையூட்டு பெற்றுக்கொண்டு அரசு வழங்கிய நிலத்தை அபகரித்தது, விவசாயிகளை தியாகிகளை அவமானப்படுத்துவதாகும். கோர்ட்டில் அவதுாறாக கொடுத்த தவறான தகவலையடுத்த பொதுப்பணித்துறை வருவாய்த்துறையை கண்டித்து சாகும் வரை தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். தினந்தோறும் ஒவ்வொரு விதமாக நுாதன போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், துாங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் செய்து வரும் விவசாயிகளை கண்டுகொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் துாங்கி வருவதை சுட்டிக்காட்டும் விதமாக, விவசாயிகள் துாங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் என்வி கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் காந்தி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.போராட்ட குழுவினர், கூறுகையில், இந்த நிலங்கள் தியாகிகளுக்கு வழங்கிய பட்டா, பூமி தான இயக்கம் மூலம் வழங்கிய பட்டா மற்றும் தலித், ஏழை விவசாயிகளுக்கு தானமாக அரசு வழங்கிய நிலம். இவை அனைத்தையும் மறைத்து எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை தந்த வருவாய்துறையினர் மற்றும் பொதுப்பணி துறையினரை கண்டித்தே உலக மண் தினத்தை முன்னிட்டு அரசு வழங்கிய நிலத்தை விவசாய மண்ணை மீட்க தூங்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்