ஹீமோபிலியா நோய்க்கு அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை - தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர்
குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது உரிய முறையில் பரிசோதனை செய்து இந் நோயில் இருந்து விடுபட நடவடிக்கை எடுக்கலாம். இது ஒரு பிறவி நோய்.
தஞ்சாவூர்: ஹீமோபிலியா நோய் குணப்படுத்தக்கூடியது தான். இதற்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்தார்.
உலக ஹீமோபிலியா தினம்
உலக ஹீமோபிலியா தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17 அன்று அனுசரிக்கப்படும் உலகளாவிய சுகாதார நிகழ்வாகும். இந்த உலகளாவிய நிகழ்வை உலக ஹீமோபிலியா கூட்டமைப்பு (WFH) ஏற்பாடு செய்துள்ளது. நோயறிதல், சிகிச்சை மற்றும் விரிவான சிகிச்சைக்கான அணுகலைப் பெற மக்களுக்கு உதவும் இந்த நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் முயற்சிக்கிறது. ஹீமோபிலியா என்பது ஒரு பரம்பரை இரத்தப்போக்கு கோளாறு ஆகும், இதில் இரத்தம் சரியாக உறைவதில்லை, இது தன்னிச்சையான இரத்தப்போக்கு மற்றும் காயங்கள் அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரத்தப்போக்குக்கு வழிவகுக்கிறது. இரத்தப்போக்கு நிறுத்த உதவும் உறைதல் காரணிகள் எனப்படும் புரதங்களின் பற்றாக்குறை அல்லது குறைந்த அளவு காரணமாக இது நிகழ்கிறது.
நெறிமுறைகள் குறித்த கையேடு வழங்கல்
உலக ஹீமோபிலியா தினம் முதன்முதலில் ஏப்ரல் 17, 1989 அன்று கொண்டாடப்பட்டது. இது உலக ஹீமோபிலியா கூட்டமைப்பை (WFH) நிறுவிய ஃபிராங்க் ஷ்னாபலின் பிறந்த நாளைக் குறிக்கிறது. உலக ஹீமோபிலியா தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஹீமோபிலியா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த கையேடு மற்றும் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பனியன் மற்றும் பயனாளிகளுக்கு மருந்துகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் பேசியதாவது. தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து 45 முதல் 50 நோயாளிகள் ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்த நோய்க்கு தேவையான விலை உயர்ந்த மருந்துகள் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் 2 முதல் 2.5 கோடி ரூபாய் வரை இதற்காக தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் இந்த நோய் குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஆரம்ப காலத்தில் இருந்தே இதற்கு சிகிச்சை பெற்றுக் கொண்டால் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
இதனை குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது உரிய முறையில் பரிசோதனை செய்து இந் நோயில் இருந்து விடுபட நடவடிக்கை எடுக்கலாம். இது ஒரு பிறவி நோய். இவ்வாறு அவர் பேசினார்.
ஹீமோபிலியா நோய் சிகிச்சை முறை
நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் ஆறுமுகம், மருத்துவ கண்காணிப்பாளர் ராமசாமி, பொது மருத்துவ துறை தலைவர் கண்ணன், நிலைய மருத்துவ அதிகாரி செல்வம், முகமது இத்ரீஸ் ஆகியோர் பேசினர். டாக்டர் ஜீவானந்தம், ஹீமோபிலியா நோயாளிகளுக்கு பாதுகாப்பு முறைகள் பற்றி விளக்கம் அளித்தார். திருச்சி காவேரி மருத்துவமனை ரத்த சிகிச்சை நிபுணர் டாக்டர் சுப்பையா தஞ்சை மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்களுக்கு ஹீமோபிலியா நோய் சிகிச்சை முறைகள் பற்றி விளக்கி கூறினார்.