(Source: ECI/ABP News/ABP Majha)
தொழிலாளியின் கொலை வழக்கு விசாரணை கும்பகோணம் கோர்ட்டில் புதிய குற்றவியல் சட்டத்தின் படி தொடக்கம்
கும்பகோணம் கோர்ட்டில் தொழிலாளியின் கொலை வழக்கு விசாரணை புதிய குற்றவியல் சட்டத்தின் படி தொடங்கியது.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோர்ட்டில் திருவிடைமருதூர் தொழிலாளியின் கொலை வழக்கு விசாரணை புதிய குற்றவியல் சட்டத்தின் படி தொடங்கியது.
3 குற்றவியல் சட்டங்கள் அறிமுகம்
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவை பின்பற்றப்பட்டு வந்தன. இதற்கு மாறாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா, பாரதிய சாக் ஷிய அதினியம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கான மசோதாக்களை மத்திய அரசு ஜனாதிபதி ஒப்புதலுடன் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த சட்டங்களின் படி குற்றம் நடந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையம் மட்டுமின்றி எந்த போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுக்கலாம் என்பது உட்பட பல்வேறு வசதிகள் அமைந்துள்ளன.
புதிய சட்டங்களால் பல குழப்பம் வரும் என கண்டனம்
இந்த சட்டங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. புதிய சட்டங்களால் பல குழப்பங்கள் உருவாகும். இவை அனைத்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பல்வேறு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் இந்த சட்டங்கள் மீது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசியல் கட்சியினர், தமிழகம் முழுவதும் உள்ள வக்கீல்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
திருவிடை மருதூர் கொலை வழக்கு விசாரணை
இருப்பினும் இந்த சட்டங்கள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட தேப்பெருமாநல்லூர் பகுதியில் வைரப்பன் கொலை செய்யப்பட்டதாக கடந்த 2022-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் 302 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கான விசாரணை கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கானது நீதிபதி ராதிகா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
புதிய சட்டத்தின் படி விசாரணை
அப்போது வைரப்பனின் கொலைக்கு குற்றம் சாட்டப்பட்ட அவரது சகோதரர் வேலப்பன் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது வேலப்பனிடம் இந்திய தண்டனைச் சட்டம் 302-க்கு பதிலாக புதிய சட்டமான பாரதிய நியாய சம்ஹிதா 103 (1)- ன் கீழ் குற்றச்சாட்டிற்கான ஆணை வழங்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீல் விஜயகுமார் ஆஜராகினார்.
பல்வேறு அரசியல் கட்சியினர் வக்கீல் சங்கத்தினர் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் கும்பகோணம் கோர்ட்டில் முதன்முதலாக புதிய சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரணை நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.