தனது பணியை திமுகவினருக்கு வழங்கியதால் குத்தாலம் பேரூராட்சியில் வேலை செய்த பெண் தற்கொலை
குத்தாலம் பேரூராட்சியில் தூய்மை பணியில் பரப்புரையாளராக பணியாற்றிய 4 பெண் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதால் மனமுடைந்து விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் நதியா, விஜயா, வேம்பு, ராதிகா ஆகிய நான்கு பெண்கள் சுகாதார பரப்புரையாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் வீடுகள் தோறும் சுகாதார பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்வது, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து பேரூராட்சிக்கு தகவல் சொல்வது, வீடுகள்தோறும் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்துத்தர அறிவுறுத்துவது போன்ற வேலைகள் செய்துவந்தனர்.
இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த இவர்களது ஒப்பந்தம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. இதனையடுத்து இந்த நான்கு பேரையும் வேலையை விட்டு நீக்கிவிட்டு திமுகவை சேர்ந்தவர்களுக்கு அந்த பணிகள் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த பணியை தங்களுக்கே வழங்க வேண்டும் என பெண்கள் கோரிவந்த நிலையில், வேலை போனதால் மனமுடைந்த நதியா சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிருக்கு போராடிய அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் சக பணியாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் இவர்களை பணி நீக்கம் செய்து விட்டு திமுகவினரை வேலையில் அமைத்ததாக கூடும் குற்றச்சாட்டுக்கு அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 - 24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தீர்வு காண வேண்டுமெனவும், இல்லையெனில் இதுபோன்ற விபரீத நிகழ்வுகள் நடைப்பெற்றது, பலரது வாழ்க்கை பாழ்கிறது என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வைத்தீஸ்வரன் கோயில் தங்க கொடிமரத்திற்காக 5 கிலோ தங்கத்தை கொடுத்த சாஸ்தரா பல்கலைக்கழகம்