அழிவின் விளம்பில் தஞ்சாவூர் மரக்குதிரைகள் - இலவசமாக கூட கற்றுக்கொள்ள விரும்பாத இளைஞர்கள்
’’தஞ்சாவூர் மரக்குதிரை தயாரிப்பதை விடுவதற்கு மனசில்லை. இதனை விட்டால், அழிந்து விடமோ என்ற பயம் உள்ளது’’
தஞ்சாவூர் என்றாலே பெருவுடையார் கோயில், தலையாட்டி மொம்மை, ஒவியம், கலைத்தட்டு ஆகியவைகள் உலக அளவில் பெயர் பெற்றவை. இதற்கு மேலும் மெருகூட்டும் வகையில், தஞ்சாவூர் மரக்குதிரையும் உள்ளது. சுமார் 25ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டில் குழந்தைகள் பிறந்தால், குறிப்பிட்ட வயது வந்தவுடன், தாய்மாமன் சீதனமாக மரக்குதிரையை வாங்கி கொடுப்பார்கள். அந்த மரக்குதிரையில், குழந்தைகள் ஒய்யாரமாக முன்னும் பின்னும் ஆடி மகிழ்வார்கள். வீட்டிலுள்ள முதியவர்கள், குழந்தைகள் மரக்குதிரையில் ஆடும் போது, பாட்டு பாடுவார்கள். இதனால் குழந்தைகளின் உடல்கள், தசைகள், நரம்புகள் வலுவடையும், ஆடும் மகிழ்ச்சியுடன் பாடும் போது, குழந்தைகளும் தனது பொக்கை வாயில் பேசவும், பாடவும் முயற்சி செய்வார்கள். இதற்காக மரக்குதிரை தயாரிக்கப்பட்டது.
தஞ்சாவூரை பூர்விகமாக கொண்ட மரக்குதிரை, சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை தஞ்சாவூர், கீழவாசல், அய்யங்கடைத்தெரு உள்ளிட்ட பகுதியில் மரவேலைகள் செய்பவர்கள் செய்து வந்தனர். காலமாற்றத்தாலும், நவீன உலகத்தாலும், போதுமான வருமானமில்லாததால், மரக்குதிரை தயாரிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து, தற்போது தஞ்சை ரயிலடியில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் செய்து வருகிறார்கள். தஞ்சை, பூக்காரத்தெருவை சேர்ந்த ஜோசப் மனைவி புஷ்பலதா (55) என்பவர், தனது கணவரை, வேலைக்கு துணையாக வைத்து கொண்டு, தஞ்சாவூர், ரயிலடி, தபால் நிலையம் எதிரில், மரக்குதிரையை தயாரித்து, விற்பனை செய்து வருகின்றார்.
பலா மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மரக்குதிரையை சுமார் 6 நாட்களாக தொடர்ந்து தயாரித்து விற்பனை செய்கின்றனர். வெளிசந்தையில் ஒரு மரக்குதிரை சுமார் 7 ஆயிரம் வரை வெளி நபர்களிடம் விற்பனை செய்யப்படும் நிலையில் புஷ்பலதாவிடம் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இக்குதிரை ஒரு மீட்டர் நீளத்திலும், தலையுடன் 3 அடி உயரத்தில், அமரும் இடத்திலிருந்து 2 அடி உயரத்தில் இருக்கும். வாடிக்கையாளர்களை கவருவதற்காக, பல்வேறு வர்ணங்களில் வர்ணம் பூசப்படுகிறது.
தற்போது மரக்குதிரையை பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாததால், மரக்குதிரையின் விற்பனை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனாலும், தஞ்சாவூரை தாயகமாக கொண்ட மரக்குதிரையை தயாரிக்கும் பணியினை, கடைசி மூச்சு உள்ளவரை தயாரிப்பேன், இளைஞர்கள், மரக்குதிரையை தயாரிக்கும் முறை கற்றுக்கொள்ள ஆர்வமுடன் வந்தால், இலவசமாக கற்று கொடுப்பேன் என புஷ்பலதா தெரிவித்துள்ளார். இது குறித்து மரக்குதிரை தயாரிக்கும் தொழிலாளர் புஷ்பலதா கூறுகையில்,
பழங்காலத்தில் பாரம்பரியமான மரக்குதிரை தஞ்சாவூரில் மட்டும் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு மட்டுமில்லாமல், வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுக்கு வாங்கி அனுப்பி வந்தனர். இதனாலே, தஞ்சாவூர் மரக்குதிரை என பெயர் உலக முழுவதும் வந்தது. கடந்த 1980 ஆண்டுக்கு முன்பு, கீழவாசலை சேர்ந்த தங்கவேல் மற்றும் முனி ஆசாரியாரிகள் மட்டும் செய்து வந்தார்கள். நாங்கள் அவரிடம் சென்று, வாங்கி வந்து விற்பனை செய்த வந்தோம். அப்போது, பள்ளியிலிருந்து வந்த ஆர்டரை, ஆசாரியார்கள், அந்த ஆர்டரை வாங்க கூடாது, வாங்கினால், நாங்கள், மரக்குதிரை செய்து தரமாட்டோம் என்று மரக்குதிரையை செய்யாமல் இருந்து விட்டனர். இது தெரியாமல் நாங்கள் சென்று பார்த்த போது, ஆசாரியார்கள், அங்கில்லை. ஆனால் மரம், உளி போன்ற பொருட்கள் மட்டும் இருந்தன. பின்னர் அதனை எடுத்து வந்து, என் கண்களால் பார்த்ததை வைத்து, மரக்குதிரையை தயாரித்தேன்.
தயாரிக்கும் சில நாட்கள் வரை தடுமாற்றம் இருந்தது, பல குதிரைகள் வீணாகி விட்டது. அதன் பிறகு தற்போது தெளிவாக செய்து விற்பனை செய்து வருகின்றேன். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகள், பால்வாடி, அனைத்து வீடுகளிலும் மரக்குதிரைகள் கட்டாயம் இருக்கும். இதில் ஒன்று முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் தாராளமாக விளையாடலாம். பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், உடல் நலக்குறைவாக இருந்தாலோ, பலகீனமாக இருந்தாலோ, நடக்க முடியாமல், நிற்கமுடியாமல் இருந்தால், இந்த மரக்குதிரையில் ஏறி ஆடச்சொல்வார்கள். மரக்குதிரையில் ஆடுவதால், வலி ஏற்படாமல் மிருதுவாக தொழில்நுட்பத்துடன், கீழே விழுந்து விடாமல், முன்னும் பின்னும் ஆடும் வகையில் தயாரிப்படுகிறது. குழந்தைகள் உட்கார்ந்து கையால், குதிரையின் காதுகளில் உள்ள குச்சியை பிடித்து ஆடும் போது, கைகள் வலுவடையும். முன்னும் பின்னும் ஆடும் போது, இடுப்பு எலும்புகள், தண்டவட எலும்புகள், முதுகு, கால் எலும்புகள், நரம்புகள் வலுவடையும்,.
மூச்சை இழுத்து, அழுத்தம் கொடுத்து ஆடும் போது, நுரையீரல் நன்கு விரிவடையும். சில நாட்களுக்கு பிறகு, குழந்தைகள் ஆரோக்கியத்துடன், திடமாகும், இதயம் பலமாகும், மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். இன்றும், கிராம புறப்பகுதியிலிருந்து வருபவர்கள், தாய்மாமன் வீட்டு சீராக, மரக்குதிரையை வாங்கி செல்கின்றனர். இது போன்ற ஆரோக்கியமான மரக்குதிரையை, குழந்தைகள் பள்ளிகள், மனநலம் குன்றிய பள்ளிகளுக்கு வாங்கி சென்று குழந்தைகள் ஆடச்சொன்னால், அனைத்தும் உறுப்புகளும் சீராகும் என்பது நிதர்சனமான உண்மை.
தற்போது எனது மகள் இத்தொழிலை விட்டு விட்டு வாருங்கள் என அழைக்கின்றார். ஆனால் தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட தஞ்சாவூர் மரக்குதிரை தயாரிப்பதை விடுவதற்கு மனசில்லை. இதனை விட்டால், அழிந்து விடமோ என்ற பயம் உள்ளது. தற்போது தனக்கும் வயதாகி வருவதால், ஆர்வமுள்ள இளைஞர்கள், பெண்கள், மரக்குதிரைக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தால், இலவசமாக கற்றக்கொடுக்க முடிவு செய்து, பல பேரிடம், பல மாதங்களாக கூறியும் இதுவரை யாரும் கற்றுக்கொள்ள முன் வரவில்லை என்பது வேதனையாகும். கொரோனா தொற்று காலத்தில் கூட மரக்குதிரையை விற்பனையாகாமல், தொழில் மிகவும் மோசமானது. ஆனாலும், மரக்குதிரையை அழிந்து விடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் தயாரித்து விற்பனை செய்கின்றோம். தஞ்சாவூர், தபால் நிலையம் எதிரில், மிகவும் மோசமான கடையில், தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால், எப்போது வேண்டுமானாலும், கடை இடிந்து விழும் நிலை காட்சியளிக்கின்றது. எனவே, மாவட்ட நிர்வாகம், அழிந்து வரும் மரக்குதிரையை தயாரிக்கும் தொழிலை ஊக்கப்படுத்த, அரசு சார்பில் பயிற்சியளிப்பதற்கான, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.