டைனோசர் முட்டையை பார்க்கணுமா... வாங்க வாரணவாசி அரசு அருங்காட்சியகத்திற்கு!!!
அரியலூர் கனிம சுரங்கங்களில் சுமார் 6.5 முதல் 7.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் அதிகமாக கிடைத்து வருகிறது.

தஞ்சாவூர்: ஆச்சரியங்களும், மர்மங்களும் நிறைந்ததுதான் பூமி. இப்படித்தான் பூமி இருந்தது என்று வரையறுத்து கூறிவிட முடியாது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய உயிரினங்கள் வாழ்ந்துள்ளன என்பதற்கு அவ்வப்போது சாட்சியாக பல்வேறு படிவங்கள் கிடைத்து வருகிறது.
அந்த வகையில் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆப்பிரிக்காவின் பழமையான டைனோசரின் எச்சங்களை ஜிம்பாப்வேயில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எம்பிரேசரஸ் ராத்தி என்று அழைக்கப்படும் இந்த டைனோசர், ஒரு மீட்டர் உயரம் கொண்டதாகவும், இரண்டு கால்களில் ஓடியதாகவும், நீண்ட கழுத்து மற்றும் கூர்மையான ஒழுங்கற்ற பற்கள் கொண்டதாகவும் இருந்தன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இப்படி பல்வேறு பகுதிகளில் டைனோசரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு கடல் பகுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த பகுதிகளில் பல்வேறு விவசாயப் பணிக்காக அவ்வப்போது பூமியைத் தோண்டும் பொழுது வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு போன்ற முட்டை வடிவிலான பாறைகள் கிடைக்கப் பெற்று வருகிறது. பல நேரங்களில் அவை டைனோசர் முட்டை என்று கூறப்பட்டாலும் அது உண்மையில்லை என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரியலூர் கனிம சுரங்கங்களில் சுமார் 6.5 முதல் 7.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்கள் அதிகமாக கிடைத்து வருகிறது. 1980-85 காலக்கட்டங்களில் தமிழ்நாடு சிமெண்டு நிறுவன திறந்தவெளி சுரங்கத்தில் ஒரு முட்டை வடிவிலான கன்கர் எனும் பாறை கிடைத்தது. இது பாறை என்று நினைத்திருந்த நிலையில் கடந்த 1996-ல் இதை ஜெர்மனி மற்றும் நம் நாட்டை சேர்ந்த சில தொல்லுயிர் ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். அப்போது ஒரு பெரிய உண்மை தெரிய வந்தது. ஆம் அது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது என்பதுதான் உண்மை. அட ஆமாங்க. அது பாறையல்லை... டைட்டனோசரஸ் என்ற ஒருவகை தாவர உண்ணி டைனோசரின் முட்டை என தெரியவந்தது. எவ்வளவு பெரிய ஆச்சரியம். இதுதான் பூமியில் நிறைந்துள்ள ஆச்சரியங்களும், மர்மங்களும் என்பதுதான் எவ்வளவு பெரிய உண்மை.
சுமார் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைட்டனோசரஸ் வகை டைனோசர் ஒரு ஆற்றின் ஓரமாக அதன் கூட்டில் இட்ட முட்டை காலப்போக்கில் தண்ணீரில் அடித்துக் கொண்டு கடல் அடியில் போய் சேர்ந்துள்ளது. அங்கு உள்ள படிமணலில் புதைந்து காலப்போக்கில் படிவமாகி இன்று நமக்கு சிதையாமல் கிடைத்திருக்கிறது.
இந்தியாவிலேயே கடலடியில் உருவான பாறைகளில் கிடைத்த ஒரே டைனோசர் முட்டை இதுவே என்ற பெருமையும் இதற்கு உண்டு. இந்நிலையில் அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குனர் பாசில் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்காக இந்த பழமையான டைனோசர் முட்டையை வழங்கினார்.
இந்த பழமையான டைனோசர் முட்டை தற்போது வாரணவாசி அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த டைனோசர் முட்டையை அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் பார்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வாரணவாசி அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள டைனோசர் முட்டையை அரியலூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, மாணவ, மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி, டைனோசர் முட்டை போன்றவை குறித்து மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்களும் அறிந்து கொள்ள முடிகிறது. இப்ப சொல்லுங்கள் நம்ம பூமி, ஆச்சரியங்களும், மர்மங்களும் அடங்கியது என்பது உண்மைதானே!!!





















