செங்கோல்: டெல்லியில் இருந்து ஆதீன மடத்திற்கு திரும்பிய திருவாவடுதுறை மடாதிபதிக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு
டெல்லி நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவிற்கு சென்று திரும்பிய திருவாவடுதுறை மடாதிபதிக்கு கிராமமக்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
![செங்கோல்: டெல்லியில் இருந்து ஆதீன மடத்திற்கு திரும்பிய திருவாவடுதுறை மடாதிபதிக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு Village enthusiastically welcome Thiruvavaduthurai abbot who returned from Delhi to Adheenam Mutt TNN செங்கோல்: டெல்லியில் இருந்து ஆதீன மடத்திற்கு திரும்பிய திருவாவடுதுறை மடாதிபதிக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/03/bd389c1c743c060f241bbca7a1d2fb8a1685777570083186_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த 1947-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது. அப்போது ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதைக் குறிக்கும் வகையில், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் சோழர்கால மாதிரி செங்கோல் வழங்கப்பட்டது. தமிழ் பாரம்பரிய முறைப்படி, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் புதிய மன்னர் பதவி ஏற்கும்போது அவரிடம் செங்கோலை ஆன்மிகத் தலைவர் ஒப்படைப்பது வழக்கமாக இருந்தது. இதன் அடிப்படையிலேயே சோழர் கால மாதிரி செங்கோல் நேருவிடம் வழங்கப்பட்டது. அது அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள நேரு கேலரியில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 28-ம் தேதி திறந்து வைக்கத்தார். அதில் மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே வரலாற்று சிறப்பு மிக்க சோழர் கால மாதிரி செங்கோல் நிறுவப்படும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தார். இதையடுத்து, அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ள செங்கோல் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் இதுகுறித்து மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறும்போது, வரலாற்று சிறப்பு மிக்க செங்கோல் அருங்காட்சியகத்தில் இருப்பது பொருத்தமற்றது என எங்கள் அரசு கருதுகிறது. இதை நிறுவுவதற்கு சிறந்த இடம் நாடாளுமன்றத்தைவிட பொருத்தமான வேறு இடம் இருக்க முடியாது.
எனவே, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவின்போது, தமிழகத்தைச் சேர்ந்த ஆதீனம் பிரதமர் மோடியிடம் இந்த செங்கோலை வழங்குவார். அதன் பிறகு அது மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகே நிறுவப்படும்” என்று கூறி இருந்தார். இதனால் எதிர்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், செங்கோல் தொடர்பாக பல்வேறு எதிர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இருந்த போதிலும் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற போது சுதந்திரம் பெற்றதன் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் மவுன் பேட்டன் பிரபுவிடம் இருந்து செங்கோலை கொடுத்து, அதனை ஆதீன தம்பிரான் சுவாமிகள் அப்போதைய பிரதமர் நேருவிடம் கொடுத்ததாக வரலாறு.
அந்த செங்கோல் தற்போது டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடியிடம் வழங்குவதற்காக திருவாவடுதுறை ஆதீன 24 -வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் மத்திய அரசின் மூலம் தனி விமானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றார். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் செங்கோல் வழங்கிவிட்டு மீண்டும் ஆதீனத்திற்கு திரும்பிய திருவாவடுதுறை மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகளுக்கு ஊர் எல்லையில் ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
யானை, அலங்கார குதிரை சகிதமாக மேளதாள மங்கள வாத்தியங்கள், சிவ கைலாய வாத்தியங்கள் முழங்க நான்கு குதிரைகள் பூட்டிய மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் மடாதிபதியை ஊர்வலமாக ஆதீன மடத்திற்கு அழைத்து வந்தனர். வழியெங்கும் கண்கவர் வானவேடிக்கை பட்டாசுகளால் ஜொலித்த நிலையில் கோலகலமாக ஆதீனகர்த்தர் ஆதீன திருமடம் வந்தார். தொடர்ந்து ஆதீன குரு மகா சன்னிதானம் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது நாதஸ்வர கலைஞர்கள் தவில் வித்வான்களோடு சேர்ந்து இசை ஆராதனை நடத்தினர்.
குறிப்பாக இந்தியா சுதந்திரம் பெற்றதன் அடையாளமாக உள்ள வந்தே மாதரம் என்ற தாரக மந்திர சொல்லின் பாடலை இன்னிசை கலைஞர்கள் ராகத்தோடு வாசித்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும், தெய்வபக்தி பாடல்களை இசைக்க ஆதீன திருமடம் இசையால் அதிர்ந்தது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருவாவடுதுறை ஆதீனம் கூறுகையில், இந்தியா சுதந்திரம் பெற்றதின் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட செங்கோல் 75 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டதன் மூலம் உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. மேலும், பொதுமக்கள் வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)