(Source: ECI/ABP News/ABP Majha)
களைகட்டும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - பாபநாசத்தில் கணவன், மனைவி, மாமியார், மருமகள் போட்டி
பாபநாசம் பேரூராட்சியில், மாமியார், மருமகள், கணவன், மனைவி வெவ்வேறு வார்டுகளில் போட்டியிடுகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து வேட்புமனு பரிசீலனை தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் மொத்தம் 129 பேர் திமுக, அதிமுக,, பாஜக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றனர். வேட்பு மனு பரீசீலனையில் விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்யாமலும். உரிய ஆவணங்கள் வைக்காததால் இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாபநாசம் பேரூராட்சியில் 127 பேர் போட்டியிடுகின்றனர்.
பாபநாசம் பேரூராட்சியில், மாமியார், மருமகள் வெவ்வேறு வார்டுகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் . பாபநாசம் பேரூராட்சியில் 10ஆவது வார்டில் ரேகா சதீஷ்குமார் அதிமுக சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர் அதிமுகவில் 10- வது வார்டு செயலாளராக இருப்பவர்.
அதேபோல், இவருடைய மாமியார் விஜயாள் முதல் வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர் இக்கட்சியில் பாபநாசம் மாதர் சங்க ஒன்றிய செயலாளராக இருந்துவருகிறார்.
இவர்கள் மட்டுமின்றி பாபநாசம் பேரூராட்சியில் அடுத்தடுத்த வார்டுகளில் கணவன், மனைவி போட்டியிடுகின்றனர். இதில் கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்த வார்டுகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பாபநாசம் பேரூராட்சி 14ஆவது வார்டில் வேட்பாளர் ஜெயராம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அவருடைய மனைவி பாக்கியலட்சுமி 15ஆவது வார்டில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஜெயராம் கடந்த 2001 மற்றும் 2011ஆம் ஆண்டு ஏழாவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாபநாசம் பேரூராட்சி தலைவராக தான் வரவேண்டுமென்பதற்காக திமுக நகர செயலாளர் கபிலன் தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் சீட் வழங்கியுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் பல வார்டுகளில் கபிலன் சீட் வழங்கியது பலரது கண்டனத்தை பெற்றுள்ளது என கூறப்படுகிறது. இதனால் பாபநாசம் பேரூராட்சியில் திமுகவின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது என திமுகவினர் முணுமுணுக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்