(Source: ECI/ABP News/ABP Majha)
கும்பகோணம்: கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூவரில் இருவர் சடலமாக மீட்பு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அணைக்கரை அருகே மதகு சாலை பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரில் 2 பேர் சடலங்கள் மீட்கப்பட்டன.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அணைக்கரை அருகே மதகு சாலை பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரில் 2 பேர் சடலங்கள் மீட்கப்பட்டன.
கர்நாடகாவின் அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீரால் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. இதையடுத்து தொடர்ந்து அணையில் இருந்து உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேட்டூரிலிருந்து 1 லட்சத்து 33 ஆயிரத்து கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கல்லணையில் இருந்து கொள்ளிடத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரித்தது.
கூடுதல் தண்ணீர் திறப்பால் தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஆறுகளிலும் கரைகளை தொட்டுக் கொண்டு தண்ணீர் ஓடியது. தற்போதுதான் மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கும்பகோணம் அருகே அணைக்கரை அடுத்த மதகுசாலை கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரின் மகன் கொளஞ்சிநாதன் (34), இவரது நண்பர்கள் கலியமூர்த்தி மகன் ஆகாஷ் (24), சேகர் மகன் மஜ்னு என்கிற மனோஜ் (22) கார்மேகம் மகன் அப்பு என்கிற ராஜேஷ் (22) ஆகிய 4 பேரும் நள்ளிரவில் மீன் பிடிப்பதற்காக வலைகளை எடுத்துக் கொண்டு அணைக்கரை கொள்ளிடத்திற்கு சென்றனர்.
அங்கு வலைவீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென உயர்ந்த தண்ணீரால் நான்கு பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களுக்கு நீச்சல் தெரியாத என்பதால் தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டு உதவி கோரியுள்ளனர். தண்ணீரின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க உதவி கோரி நால்வரும் கூக்குரலிட்டுள்ளனர். அப்போது அவ்வழியே சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடன் இதுகுறித்து திருவிடைமருதூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
இதற்கிடையில் 4 பேரும் கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது ஆற்றில் நாணலை பிடித்துக் கொண்டு கொளஞ்சி நாதன் தத்தளிப்பதை கண்டு அவரை மீட்டனர். ஆனால் ஆகாஷ், மனோஜ், ராஜேஷ் ஆகியோர் தண்ணீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டனர். சம்பவ இடத்திற்கு வருவாய் துறை அலுவலர்கள், அதிகாரிகள் வந்து முகாமிட்டு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரையும் தேடும் பணியை முடுக்கி விட்டனர். படகு வரவழைக்கப்பட்டு தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இதனால் அணைக்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீப்புலியூர் கொள்ளிட கரை அருகில் தீயணைப்பு மீட்பு படை குழுவினரால் மனோஜ் சடலமாக மீட்கப்பட்டார். இதே போல ஆகாஷ் மயிலாடுதுறை மாவட்டம் முடிகொண்டான் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். ஆனால் ராஜேஷ் நிலை என்னவானது என்று இன்னும் தெரியாத நிலைதான் உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்