தஞ்சையில் ரியல் ஹீரோவாக மாறிய போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்
விளக்குமாறு கொண்டு கூட்டி சுத்தம் செய்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் செயலை கண்டு பொதுமக்கள் பாராட்டினர்.

தஞ்சாவூர்: காவல்துறை உங்களின் நண்பன் என்பதை துல்லியமாக நிரூபித்துள்ளார் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். என்ன விஷயம் தெரியுங்களா?
தஞ்சாவூரில் சாலையில் சிதறிகிடந்த கண்ணாடி துகள்களால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தானே விளக்குமாறு கொண்டு கூட்டி சுத்தம் செய்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் செயலை கண்டு பொதுமக்கள் பாராட்டினர். தானே களம் இறங்கி மக்களுக்காக சேவை செய்து காவல்துறை உங்களின் நண்பன்தான் என்று துல்லியமாக நிரூபித்துள்ளார்.
தஞ்சாவூரில் பெரிய கோயில் எதிரே எப்போதும் போக்குவரத்து நிறைந்து நெரிசலோடு காணப்படும். இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீஸார் காலை மற்றும் மாலையில் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர். விடுமுறை நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம். பெரிய கோயில் பகுதியே ஸ்தம்பித்து விடும். அந்தளவிற்கு வெளியூர் மாவட்ட சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் குவிந்து விடுவார்கள். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு மாலை அணிந்துள்ள பக்தர்களும் அதிகளவில் பெரியகோயிலுக்கு வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில் இன்று காலை பெரியகோயில் எதிரே போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜகண்ணன் பணியில் இருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற ஆட்டோ ஒன்று திடீரென நிறுத்தியதால் பின்னால் வந்த ஆட்டோ அதன்மீது மோதியது. இதனால் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி உடைந்து, கண்ணாடி துகள்கள் சாலையில் சிதறியது. இதனால் வாகன ஓட்டிகள். பொதுமக்கள் அவதிப்பட்டனர். நடந்து சென்ற மக்களும் அவதிக்குள்ளாகினர்.
அப்போது அங்கு போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜகண்ணன் விநாடி நேரம் கூட யோசிக்காமல் பெரிய கோயில் முன்பு கிடந்த ஒரு விளக்கமாறுவை எடுத்துக் கொண்டு கிடுகிடுவென்று சாலையில் ஆட்டோ கண்ணாடி உடைந்து கிடந்த இடத்திற்கு சென்றார். அங்கு சிதறிக்கிடந்த கண்ணாடி துகள்களை கூட்டி சுத்தம் செய்தார். இந்த செயலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பலரும் பாராட்டினர். மக்களின் கண்களுக்கு ராஜகண்ணன் ரியல் ஹீரோவாகவே மாறினார் என்றால் மிகையில்லை. வாகனங்களின் டயரில் கண்ணாடி துகள்கள் குத்தி விபத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக விரைந்து செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ராஜகண்ணனை மக்கள் ரியல் ஹீரோவாகவே பார்த்து சென்றனர். தங்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.





















