போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் ரவுண்டானா: அகற்றுவீங்களா? அளவை குறைப்பீங்களா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
ரவுண்டானாவை அகற்றுவது அல்லது அதன் அளவை குறைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க வேண்டும்

தஞ்சாவூர்: தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவால் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும், எனவே அந்த ரவுண்டானாவை அகற்ற வேண்டும் அல்லது அதன் அளவை குறைக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாநகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தஞ்சை ஆற்றுப்பாலம் அண்ணா சிலை பகுதி, தொம்பன்குடிசை, பெரிய கோவில் பகுதி, ராமநாதன் ரவுண்டானா, மேரீஸ் கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை குறைக்க அமைக்கப்பட்ட ரவுண்டானாக்கள்
தஞ்சை தொம்பன்குடிசை பகுதி மற்றும் ஆற்றுப்பாலம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டன. இந்த ரவுண்டானாக்கள் வழியாக வாகனங்கள் சுற்றிச் செல்வதால், பல பகுதிகளில் போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை அமைந்துள்ள பகுதியிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தப் பகுதியில் மாவட்ட நிர்வாகம், தஞ்சை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
8 சாலைகள் சந்திக்கும் முக்கிய பகுதி
அண்ணா சிலை அமைந்துள்ள பகுதி மிகவும் முக்கியமான போக்குவரத்து சந்திப்பாகும். இந்த பகுதியில் பல சாலைகள் சந்திக்கின்றன. மேலும் பழைய பஸ் நிலையம் அமைந்துள்ளதால் 24 மணி நேரமும் இப்பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது.
இந்த பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டிருந்தாலும், அது தற்போது செயல்படாத நிலையில் இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு திசையிலிருந்தும் வரும் வாகனங்கள் ஒரே நேரத்தில் சந்திப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
நெரிசலை ஏற்படுத்தும் ரவுண்டானா
இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணா சிலை பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. அண்ணா சிலையின் பின்புறத்தை ஒட்டியவாறு சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள இந்த ரவுண்டானா, தற்போது போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பதிலாக அதிகரித்து வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக, தஞ்சை கொடிமரத்து மூலை பகுதியில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அண்ணா சாலை வழியாக புதிய பஸ் நிலையம் நோக்கி செல்கின்றன.
அவ்வாறு வரும் பேருந்துகள் ரவுண்டானா பகுதியில் திரும்பும்போது போதிய இடவசதி இல்லாததால், பேருந்துகளை திருப்புவதில் ஓட்டுநர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பேருந்துகள் திரும்பும் நேரத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அருகில் செல்வதால், போக்குவரத்து மேலும் பாதிக்கப்படுகிறது.
மாலை நேரங்களில் அதிகரிக்கும் நெரிசல்
காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு செல்வோர் அதிகளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மாலை நேரங்களில் அண்ணா சிலை ரவுண்டானா பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.
ஒரே நேரத்தில் பல திசைகளில் இருந்து வாகனங்கள் வருவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் சிறிய இடையூறுகளுக்குக் கூட வாகன ஓட்டிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படும் நிலை காணப்படுகிறது.
ரவுண்டானாவை அகற்ற கோரிக்கை
இதனால், அண்ணா சிலை மற்றும் அருகில் உள்ள கலைஞர் சிலை ஆகியவற்றை ஒருங்கிணைத்து அமைத்து, தற்போதைய ரவுண்டானாவின் அளவை குறைக்கலாம் என வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அல்லது தற்போதுள்ள ரவுண்டானாவை முழுமையாக அகற்றி, போக்குவரத்து சீராக நடைபெறும் வகையில் சாலை அமைப்பை மாற்றினால், வாகன நெரிசல் பெருமளவு குறையும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து அண்ணா சிலை ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ரவுண்டானாவை அகற்றுவது அல்லது அதன் அளவை குறைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















