"பாரம்பரியத்தை காக்க ஒரு நிகழ்ச்சி” இது என்ன விளையாட்டு..?
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் முதல் மாநிலமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து காட்டுவார்.

தஞ்சாவூர்: எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் நமது பழமையான பாரம்பரிய கலாச்சாரத்தை போற்ற வேண்டியது அவசியம். நாம் விளையாடிய கிட்டிப்புள் கிரிக்கெட்டாக மாறியது. ஆடுபுலி ஆட்டம் சதுரங்கமாக மாறியது என்று அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணலூர், கஞ்சனூர் ,கோட்டூர் , துகிலி ,திருக்கோடிக்காவல் ஆகிய ஐந்துஊராட்சிகளைச் சேர்ந்த அனைத்து மக்களும் ஒரே இடத்தில் கூடி மறந்து போன பாரம்பரிய விளையாட்டுக்களான பல்லாங்குழி, கோலி, பம்பரம், ஆடு புலி ஆட்டம். பனங்காய் வண்டி., ஸ்கிப்பிங் கயிறு போன்ற விளையாட்டுகளில் போட்டிகள் நடைபெற்றது.

இந்த விளையாட்டுகளை திருவாவடுதுறை ஆதீனம் துவக்கி வைத்தார் அவரே பம்பரம் மற்றும் ஆடு புலி ஆட்டம் விளையாடி இந்த பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களிடம் கூறியதாவது:
இட ஒதுக்கீடு, சமூக நீதிக் கொள்கை, சமச்சீர் கல்வி பெண்களுக்கு சொத்தில் சம உரிமை போன்ற பிரச்சனைகளில் வெற்றி பெற்று மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டதோ அதேபோல் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் முதல் மாநிலமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து காட்டுவார்.
எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் நமது பழமையான பாரம்பரிய கலாச்சாரத்தை போற்ற வேண்டியது அவசியம். நாம் விளையாடிய கிட்டிப் பிள்ளை கிரிக்கெட்டாக மாறியது. ஆடுபுலி ஆட்டம் சதுரங்கமாக மாறியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கிட்டிப்புள் விளையாட்டு பற்றி தெரிந்து கொள்வோம்
இந்த கிட்டிப்புள் விளையாட்டில் கலந்துகொள்பவர்கள் ‘உத்திப் பிரித்தல்’ மூலமாக இரண்டு அணிகளாகப் பிரிந்து கொள்வார்கள். பிறகு, ’பூவா தலையா’ போட்டு, முதலில் விளையாடுபவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒன்றரை அடி நீளமுள்ள ஒரு குச்சியை ‘கிட்டி’யாகவும், மூன்று அங்குலம் (8 செ.மீ.) நீளமுள்ள ஒரு சிறு குச்சியை ‘புள்’ளாகவும் வைத்துக் கொள்வார்கள். கிட்டியின் ஏதாவது ஒரு முனையையும், புள்ளின் இரு முனைகளையும் கூர்த்தீட்டிக் கொள்வார்கள்.
முதலில் விளையாட்டை தொடங்கும் அணி, சிறு குழியின் மேலாகக் கிட்டியை வைத்துவிட்டு, ஓரமாக நின்றுகொள்வார்கள்.. இருபதடி தொலைவில் மற்றோர் அணியின் கையிலுள்ள புள்ளால், கிட்டியை நோக்கி குறி பார்த்து வீச வேண்டும். புள் கிட்டியை அடித்துவிட்டால், முதல் அணியிலுள்ள முதல் போட்டியாளர் ’அவுட்’ ஆவார். பிறகு, முதல் அணியின் இரண்டாவது போட்டியாளர் ஆட்டத்துக்கு வர வேண்டும். மீண்டும் இரண்டாவது அணியினர் கிட்டியை நோக்கி, புள்ளை வீச வேண்டும். இந்த முறை அடிக்காவிட்டால், இரண்டாவது போட்டியாளர் ஆட்டத்தைத் தொடர்வார்.
புள்ளை சிறிய குழியின் மேற்புறத்தில் வைத்து, நடுவில் கிட்டியை வைத்து அப்படியே வேகமாக வீசுவார்கள். இதனைப் பிடிப்பதற்கென்றே இரண்டாவது அணியைச் சேர்ந்தவர்கள் எதிரில் நிற்பார்கள். புள்ளைப் பிடிக்காத பட்சத்தில், அந்தச் சிறுகுழியை நோக்கி புள்ளை அவர்கள் வீசுவார்கள். புள் குழியின் அருகே விழாதவாறு கிட்டியைக் கொண்டு தடுக்க வேண்டும்.

குழியிலிருந்து கிட்டியால் தொடும் தூரத்துக்கு புள் விழுந்துவிட்டால், இரண்டாவது போட்டியாளரும் ‘அவுட்’ ஆவார். ’அவுட்’ ஆகவில்லையென்றால், கிட்டியைக் கொண்டு புள்ளின் நுனிப்பகுதியில் வேகமாகத் தட்டி மேலெழச் செய்ய வேண்டும். அவ்வாறு மேலெழும் புள்ளை கிட்டியால் வேகமாக அடிக்க வேண்டும். இதையும் பிடிப்பதற்கு இரண்டாவது அணியினர் கலைந்து நிற்பார்கள்.
புள்ளை யாரும் பிடிக்காத நிலையில், எவ்வளவு தொலைவில் புள் விழுந்ததோ, அங்கிருந்து புள்ளை கையில் எடுத்துக்கொண்டு, குழி இருக்கும் இடம்வரை இரண்டாவது அணியைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் நொண்டியடித்தபடி வர வேண்டும். இந்த விளையாட்டுதான் மாற்றம் பெற்று மாற்றம் பெற்று தற்போது கிரிக்கெட்டாக உருமாறியுள்ளது.





















