திருவாரூர்: 50 ஆண்டுகளாக விவசாய நிலத்தில் சடலத்தை தூக்கி செல்லும் அவல நிலை - கிராம மக்கள் வேதனை
பிரேதம் பலமுறை வயலில் விழுந்தும் அல்லது வயல்களுக்கு நடுவில் உள்ள வாய்க்காலில் விழுந்தும் பல சிரமங்களை தாண்டி தான் மயானத்துக்கு செல்ல வேண்டி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
திருவாரூர் மாவட்டம் நான்கு நகராட்சி 7 பேரூராட்சி பத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 534 ஊராட்சிகளை உள்ளடக்கியது. மாவட்ட முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 10,000 மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதே நேரத்தில் இன்றளவும் பல்வேறு கிராமங்களில் குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் பாதித்து வருகின்றனர். குறிப்பாக பல கிராமங்களில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை வசதி இல்லாத நிலையில் ஆறுகளில் இறங்கியும் விவசாய நிலத்தில் இறங்கியும் சுடுகாட்டிற்கு செல்ல வேண்டிய நிலை இதுவரை உள்ளது. இது சம்பந்தமாக பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் ஆப்பரகுடி கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாமல் விவசாய நிலத்தில் இறங்கிச் செல்லும் நிலை உள்ளதாக அந்த பகுதி மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம் ஆப்பரக்குடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆதியன் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் வசித்து வருகின்ரனர். இந்த மக்களுக்கான மயானமானது ஆப்பரக்குடியில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக வயல் வெளிகளுக்கு நடுவே உள்ளது. இந்நிலையில் ஊரில் யாரேனும் உயிரிழந்தால் அப்பகுதி மக்கள் இறந்தவர்களை நினைத்து துயர படுகிறார்களோ இல்லையோ இந்த சடலத்தை மயானத்துக்கு தூக்கிச் செல்ல நாம் என்ன பாடு பட வேண்டும் என்ற கவலை தொற்றிக்கொள்ளும் நிலை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு பயணத்துக்கான பாதை இல்லாமல் ஆப்பரக்குடி குடிமக்கள் பெருந்துன்பம் பட்டு வருகின்றனர்.
இந்த கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால் அவரது பிரேதத்தை வயல் வழியாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துச் செல்கின்றனர். அப்பொழுது பிரேதம் பலமுறை வயலில் விழுந்தும் அல்லது வயல்களுக்கு நடுவில் உள்ள வாய்க்காலில் விழுந்தும் பல சிரமங்களை தாண்டி தான் மயானத்துக்கு செல்ல வேண்டி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். உடனடியாக மயானத்துக்கு செல்வதற்கு உரிய பாதை அமைத்து தர வேண்டும் என்பது உயிரோடு உள்ள மனிதர்களுக்கு மாத்திரமல்ல, இடுகாட்டை நோக்கிப் பயணிக்கும் பல ஆத்மாக்களின் கோரிக்கையும் இதுவாகத்தான் இருக்கும் என்கின்றனர் ஆப்பரக்குடி பொதுமக்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்