”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
கிழமை நீதிமன்றத்தில் சின்னம் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால், அதை காரணம் காட்டி இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க வாய்ப்பு உள்ளது

இரட்டை இலை சின்னத்தை தற்காலிகமாக முடக்கி வைக்க வேண்டும் என்ற வழக்கில் வரும் டிசம்பர் 2ஆம் தேதிக்குள் முடிவு எடுத்டு அறிவிக்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் சொல்லியுள்ளது அதிமுக கூடாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
என்ன பின்னணி ?
சின்னம், கட்சி தொடர்பாக ஒபிஎஸ், கேசி பழனிசாமி உள்ளிட்ட பலர் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அந்த வழக்குகள் முடிந்து இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட யாரும் பயன்படுத்த கூடாது என்றும் வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை இரட்டை இலை சின்னத்தை தற்காலிகமாக முடக்கி வைக்க வேண்டும் எனவும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது, இது தொடர்பாக தான் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்ததாகவும் ஆனால், இதுவரை எந்த ஒரு முடிவையும் தன் மனு மீது தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என்றும் அவர் தன்னுடைய வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்த இந்திய தேர்தல் ஆணையம், வரும் டிசம்பர் 2ஆம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் தொடர்பாக முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
கலக்கத்தில் எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில், தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்து சின்னத்தையும் தனக்கு ஒதுக்கி, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்திலேயே அதிமுக போட்டியிட்ட நிலையில், மீண்டும் இதில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் சொல்லியிருப்பது எடப்பாடி பழனிசாமியை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிழமை நீதிமன்றத்தில் சின்னம் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால், அதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை தற்காலிகமாக முடக்கிவிடுவோமோ என்ற அச்சம் அதிமுகவினருக்கு இப்போது வந்திருக்கிறது.
கூட்டணி காய்நகர்த்தலில் பாஜக
இதோடு, இந்த விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அதிமுகவை மீண்டும் பாஜக-வின் கூட்டணிக்குள் கொண்டுவர அந்த கட்சியின் முக்கிய நபர்கள் திட்டமிட்டிருப்பதாக அதிமுக நிர்வாகிகள் கருதுகின்றனர். மத்திய பாஜக அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணையம் மூலம் இரட்டை இலை சின்னத்தை தற்காலிகமாக முடக்கி வைக்க பாஜக சதி செய்கிறதோ என்ற கவலையில் தொண்டர்களும் ஆழ்ந்துள்ளனர்.
2026 தேர்தலிலும் பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்று அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்ட நிலையில், இரட்டை இலையை முடக்கி அவரை மீண்டும் தங்கள் வழிக்கு கொண்டுவரும் உத்தியை பாஜக பயன்படுத்தும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கணக்கு போடுகின்றனர்.
டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு
டிச.2ஆம் தேதிக்குள் இரட்டை இலை சின்னத்தில் ஒரு முடிவு கிடைத்துவிடும் என்ற சூழல் இருக்கும் நிலையில், அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுவை டிசம்பர் 15ஆம் தேதி கூட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் தன்னை பொதுச்செயலாளராக தேர்வு செய்யும் நடைமுறையை செயல்படுத்தி 2026 தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியை அமைக்க சபதமேற்கும் நிகழ்வாக அந்த பொதுக்குழு நிகழ்வை மாற்றிக் காட்ட எடப்பாடி பழனிசாமி மெனக்கிட்டு வருகிறார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி அமைத்த கள ஆய்வு குழுவினர் மாவட்டம் தோறும் சென்று ஆய்வு நடத்தும்போது அங்கு அதிமுக நிர்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இதேபோன்றதொரு மோதல் இந்த முறை பொதுக்குழுவிலும் வந்துவிடுவோமோ என்ற அச்சமும் எடப்பாடி பழனிசாமிக்கு வரத் தொடங்கியிருப்பதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

