மேலும் அறிய
அரியலூர் ஆய்வில் கிடைத்த கடல் வாழ் உயிரினங்களின் தொல் புதை படிவங்கள்
கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மரங்கள் போன்றவை கல்லாக மாறுவதற்கு பல கோடி ஆண்டுகள் ஆகும் என தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

கடல் வாழ் உயிரினங்களின் தொல் புதை படிவங்கள்
கீழடிக்கு முந்தைய 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடல் வாழ் உயிரினங்களின் தொல் புதை படிவங்கள் கிடைத்துள்ளதாக திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் அரியலூர் பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.
திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் சமுதாயக் கல்லூரியில் இந்த ஆண்டு முதல்முறையாக கல்வெட்டியல் மரபு மேலாண்மை என்கிற பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது.இதில் 40 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்வெட்டியல் மரபு மேலாண்மை பட்டயப் படிப்பு மாணவர்கள் தமிழ் துறை தலைவர் பேராசிரியர் ரவி தலைமையில் அரியலூர் பகுதியில் நேரடி கள ஆய்வுக்காக சென்றனர். அங்கு அரியலூர் தமிழ்நாடு சிமெண்ட் ஆலை அருகில் அவர்கள் மேற்பரப்பு ஆய்வு செய்தபோது கடல் நட்சத்திர மீன்கள் கிளிஞ்சல்கள் சிப்பிகள் கடல் நத்தைகளின் ஒரு பகுதி கடல்வாழ் உயிரினங்களின் பல் போன்ற உடல் பாகங்கள் கடல் தாவரங்கள் போன்றவற்றின் தொல் உயிர் படிவங்கள் கற்படிவங்களாக கிடைத்துள்ளன.
குறிப்பாக கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மரங்கள் போன்றவை கல்லாக மாறுவதற்கு பல கோடி ஆண்டுகள் ஆகும் என தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர். அதன் அடிப்படையில் இங்கு கிடைக்கப்பெற்ற இந்த கடல் வாழ் உயிரினங்களின் தொல் படிவங்கள் 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய தாக இருக்கலாம் என்று துணைத் தலைவர் ரவி தெரிவிக்கிறார்.
அதே போன்று அரியலூர் அருகில் உள்ள வாரணாசி என்கிற இடத்தில் மாணவர்கள் மேற்பரப்பு ஆய்வு செய்யும் போது இரும்பை உருக்கும் கசடு போன்ற பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இது குறித்து தமிழ் துறை தலைவர் பேராசிரியர் ரவி கூறுகையில் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் வாழ் உயிரினங்களான நட்சத்திர மீன்கள் நத்தை போன்ற கடல் வாழ் உயிரினங்களின் தொல் படிவங்கள் அரியலூரில் அதிக அளவு கிடைக்கின்றன. ஆனால் இங்கு வெள்ளை தங்கம் எனப்படும் சுண்ணாம்பு கற்கள் சிமெண்ட் தொழிற்சாலைக்காக தோண்டி எடுக்கப்படுவதால் இது போன்ற புதை படிவங்கள் அழிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே தமிழக தொல்லியல் துறை சார்பில் அங்கு ஆய்வு நடத்தி அந்த உயிர் தொல் படிவங்களை பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















