திருவாரூர்: 5000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் புகையான், இலை சுருட்டல் நோய்களினால் பாதிப்பு - விவசாயிகள் கவலை
நெற்பயிர்களை புகையான் மற்றும் இலை சுருட்டல் நோய்கள் கடுமையாக தாக்கி வருகின்றன.இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் பதர்களாக மாறிவிடும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என மூன்று போகும் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததன் காரணத்தினாலும் பருவ மழை பொய்த்து போனதன் காரணத்தினாலும் மூன்று போக சாகுபடி என்பது ஒருபோக சாகுபடியாக மாறியது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதன் காரணத்தினால் மீண்டும் டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் சாகுபடி என்பது நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் என்பது முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி உள்ள மாவட்டமாகும். இங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாக விவசாயமும் கால்நடைகளும் இருந்து வருகிறது. பெரும்பாலும் இந்த மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிற் சாகுபடிகளில் மட்டும் சமீப காலமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாய பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் இந்த வருடம் 75 ஆண்டுகளுக்கு பிறகு மே 24ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை நெற்பயிற் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் குறுவை நெற்பயிர் அறுவடை என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது.கடந்த 15 நாட்களாக வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக கனமழை பெய்த காரணத்தினால் மாவட்டம் முழுவதும் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் பாதிப்படைந்தன. சென்ற வருடமும் இந்த வருடமும் குறுவை நெற்பயிர் சாகுபடிக்கு பயிர் காப்பீடு அரசு அறிவிக்காத காரணத்தினால் விவசாயிகள் இதற்கான இழப்பீடு பெற முடியாமல் உள்ளனர். இந்த நிலையில் தற்போது கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட புழுதிக்குடி வல்லவராயன் கட்டளை, விக்கிரபாண்டியம்,கோட்டூர், சிதம்பர கோட்டகம் சிராங்குடி சபாபதிபுரம் இருள் நீக்கி போன்ற பகுதிகளில் குறுவை நெற்பயிர்கள் பால் கட்டும் பருவத்தில் இருக்கின்றன.தற்போது இந்த நெற்பயிர்களை புகையான் மற்றும் இலை சுருட்டல் நோய்கள் கடுமையாக தாக்கி வருகின்றன.இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் பதர்களாக மாறிவிடும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கனமழை காரணமாக குறுவை நெற்பயிர் சாகுபடி பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான இழப்பீடை விவசாயிகள் தமிழக அரசிடம் இருந்து எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய நிலையில் தற்போது இந்த புகையான் மற்றும் இலை சுருட்டல் நோய் காரணமாக அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு பதர்களாக மாறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே மாவட்ட வேளாண்துறை உரிய நடவடிக்கை எடுத்து இந்த நோய் தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை காக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.