மேலும் அறிய
Advertisement
திருவாரூர் : குறுவை சாகுபடிக்கு காப்பீடு திட்டத்தை அறிவிக்குமா தமிழ்நாடு அரசு? எதிர்பார்க்கும் டெல்டா விவசாயிகள்..!
கரும்பு, உளுந்து, எள், பருத்தி, உள்ளிட்ட மற்ற சாகுபடியிலும் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவது வழக்கம்.
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா என மூன்று போக நெல் சாகுபடியையும் அதுமட்டுமன்றி கரும்பு, உளுந்து, எள், பருத்தி, உள்ளிட்ட மற்ற சாகுபடியிலும் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவது வழக்கம். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் 70 சதவிகிதம் விவசாயிகள் மேட்டூர் அணையை மட்டுமே நம்பி சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் உள்ள 30 சதவீத விவசாயிகள் ஆழ்துளை கிணறுகள் மூலமாக தங்களது சாகுபடி பணிகளுக்கான தண்ணீர் சேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வராத காரணத்தினால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். தற்பொழுது கடந்த ஆண்டு முதல் மீண்டும் மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணமாக மீண்டும் குறுவை சம்பா என மூன்று போகம் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு தஞ்சை திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டது. மேலும் அரசு அறிவித்த இலக்கை விட தற்பொழுது வரை 3 லட்சத்து 53 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சாகுபடி பணிகளில் ஈடுபட்டு 60 நாட்கள் ஆன நிலையில் இதுவரை விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்தை அரசு அறிவிக்கவில்லை. கடந்த ஆண்டு குறுவை சாகுபடியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுக்கு ஜூன் மாதம் பயிர் காப்பீடு திட்டத்திற்கான தொகையை செலுத்த அரசு அறிவித்திருந்தது. மேலும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் அனைத்து விவசாயிகளும் காப்பீடு தொகையை கட்டிமுடிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் அரசு விடுத்திருந்தது. அதே நேரத்தில் இந்த ஆண்டு இதுவரை தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்தினை அறிவிக்கப்படாமல் இருக்கிறது, இதனால் விவசாயிகள் காப்பீடு திட்டத்தை அரசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து டெல்டா மாவட்ட விவசாயிகள் கூறும்பொழுது, ”ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பல்வேறு சோதனைகளுக்குப் பின்னரே தாங்கள் பயிரிட்ட பயிர்களை அறுவடை செய்து வருகிறோம். ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் பிரச்சனை ஏற்பட்டு பயிர் சேதமடைகிறது. குறிப்பாக தண்ணீர் பிரச்சனை காரணமாகவும், அதேபோன்று பூச்சி தாக்குதல் காரணமாகவும் மகசூல் இழப்பு ஏற்படும். அந்த நேரத்தில் எங்களை காப்பாற்றுவது பயிர் காப்பீடு திட்டம் மட்டும்தான். நாங்கள் செய்த செலவில் பாதி அளவு தொகையாவது பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் எங்களுக்கு கிடைக்கும். அதேநேரத்தில் கடந்த சில ஆண்டுகளில் பயிர் காப்பீட்டு திட்டம் அறிவித்தும் பல்வேறு கிராமங்களுக்கு கிடைக்காமலும் இருந்துள்ளன.
அதே நேரத்தில் காப்பீடு செய்தால் எங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன் இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து பயிர் காப்பீடு செலுத்தி வருகிறோம். குறிப்பாக அரசு அறிவிக்கும் காப்பீட்டு தொகையில் ஒரு ஏக்கருக்கு 400 ரூபாய் விவசாயிகள் ஆகிய நாங்கள் செலுத்துவோம், மீதமுள்ள தொகையை அரசு செலுத்தும். பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளை காப்பீட்டு நிறுவனங்கள் ஆய்வு செய்து அதற்கு ஏற்றார்போல் தொகையை அறிவிக்கும். ஆனால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகள் முழுவீச்சில் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் இதுவரை பயிர் காப்பீடு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவிக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உடனடியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பயிர் காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion