திருவாரூர் அருகே வெண்ணாற்றில் உடைப்பு...ஆற்று நீர் நிலத்தில் புகுந்ததால் விவசாயிகள் வேதனை..!
வெண்ணாற்று கரையில் உடைப்பு ஏற்பட்டு அதிகளவு தண்ணீர் அருகில் உள்ள குறுவை சாகுபடி செய்துள்ள விவசாய நிலங்களில் உட்புந்துள்ளதால் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் வெண்ணாறு, வெட்டாறு, பாமணி ஆறு, ஓடம்போக்கியாறு, பாண்டவையாறு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஆறுகள் பாய்ந்து ஓடுகின்றன. இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதன் காரணத்தினாலும் தற்பொழுது மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக மாலை இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூரில் உள்ள பிரதான ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் சேந்தங்குடி அருகே பொய்கைநல்லூர் கிராமத்தில் வெண்ணாற்று கரையில் உடைப்பு ஏற்பட்டு அதிகளவு தண்ணீர் வெளியேறி வருகிறது இந்த தண்ணீர் அருகில் உள்ள குறுவை சாகுபடி செய்துள்ள விவசாய நிலங்களில் உட்புந்துள்ளதால் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
அது மட்டுமன்றி பருத்தி சாகுபடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த பகுதியில் கருத்தில் வயலில் தண்ணீர் கொண்டு வருவதால் பருத்தி சாகுபடி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த ஆற்று நீர் வெளியேறினால் பொய்கை நல்லூர் செருவாமணி, மாரங்குடி, இலுப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமில்லாமல் குடியிருப்புகளும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் வெண்ணாற்றில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கிராம மக்களும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த ஆற்றுக்கு நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெண்ணாற்றின் கரை ஓரத்தில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்ததன் காரணமாகவே இந்த கடை உடைப்பு ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் எனவும் அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உடனடியாக ஆற்றின் உடைப்பை சரி செய்வதற்கான பணிகளை துரிதமாக மேற்கொண்டு அடைப்பை அடைக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இல்லை என்றால் ஆயிரக்கணக்கான இயக்க விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்பொழுது திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது இதனால் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் மேலும் பலவீனமாக உள்ள பகுதிகளில் மணல் மூட்டைகளை முன்கூட்டியே அடுக்கி வைக்க வேண்டும். மேலும் ஆற்றின் கரை உடையாமல் இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் பொதுமக்களும் ஆற்றில் செல்பி எடுக்கவோ அதிகளவு தண்ணீர் சென்றால் சிறிய குழந்தைகள் பள்ளி மாணவர்கள் என குளிப்பதற்கு யாரும் சல்ல வேண்டாம் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.