கொளுத்துது வெயிலு... சூடு பிடிக்குது தர்பூசணி விற்பனை: மகிழ்ச்சியில் வியாபாரிகள்
வெயில் தாங்கலையே என்று தஞ்சைக்கு சுற்றுலாவாக வரும் பயணிகள் பெரிய கோயில் பகுதியில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள தர்பூசணி மற்றும் வெள்ளரி பிஞ்சுகள், இளநீரை வாங்கி சாப்பிடுகின்றனர்.
தஞ்சாவூர்: வெயில் தாங்கலையே என்று தஞ்சைக்கு சுற்றுலாவாக வரும் பயணிகள் பெரிய கோயில் பகுதியில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள தர்பூசணி மற்றும் வெள்ளரி பிஞ்சுகள், இளநீரை வாங்கி சாப்பிடுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சையில் கோடை வெயில் தாக்கம் இப்போதே கொளுத்த தொடங்கி விட்ட நிலையில் தர்பூசணி, வெள்ளரி பழங்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. மேலும் பப்பாளி, அன்னாசி பழங்கள் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.
கிலோ ரூ.20க்கு தர்பூசணி
மார்ச் மாதம் 2ம் வாரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துவிட்டது. இதனால் மக்கள் வெப்பத்தை தணித்துக் கொள்ள குளிர்பானங்கள், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை அதிகம் வாங்கி சாப்பிடத் தொடங்கி உள்ளனர். முக்கியமாக புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, திண்டுக்கல் உட்பட பல பகுதிகளில் இருந்து தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வரத்து குறைவாக இருந்ததால் ஒரு கிலோ ரூ.25க்கு தர்பூசணி விற்பனை ஆகி வந்தது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது.
சில்லறை வியாபாரிகள் தர்பூசணியை துண்டு போட்டு ரூ.10 என்று விற்பனை செய்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் தர்பூசணி விற்பனை களைக்கட்டி வருகிறது. குளிர்ச்சியோடு சுவையையும் வழங்கும் தர்பூசணி பழத்திற்கு கோடைக்காலத்தில் எப்போதும் தனி இடமும், மவுசும் உண்டு.
விலை குறையும் என எதிர்பார்ப்பு
பகல் நேரத்தில் கத்திரி வெயில் போல் வெப்பம் தகித்தால் பொதுமக்கள் குளிர்பானங்கள், தர்பூசணி, பழங்கள், வெள்ளரி பிஞ்சு போன்றவற்றை அதிகளவில் வாங்கி சாப்பிடுகின்றனர். குறிப்பாக பெரிய கோயிலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தர்பூசணி பழங்களை விரும்பி சாப்பிடுகின்றனர். தர்பூசணி வரத்து நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் விலை இன்னும் குறையும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.
தஞ்சையில் புதிய பேருந்து நிலையம், பெரியகோவில் பகுதி, பழைய பேருந்து நிலையம், கொடி மரத்து மூலை, மருத்துவக்கல்லூரி சாலை, நாஞ்சிக்கோட்டை ரோடு என பல பகுதிகளிலும் தர்பூசணி பழம் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதே போல் வெள்ளரி பிஞ்சுகள் விற்பனையும் களைக்கட்டி வருகிறது. சிறிய கட்டு ரூ.20, பெரிய பிஞ்சுகள் 4 அல்லது 5 உள்ள கட்டு ரூ.50 என்று விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
அன்னாசி பழங்கள் வரத்து அதிகரிப்பு
இவற்றுக்கு மத்தியில் கேரளாவில் இருந்து அன்னாசி பழங்கள் வரத்தும் அதிகரித்துள்ளது. இவை கிலோ ரூ.80 என்று விற்பனையாகிறது. அதேபோல் திண்டுக்கல்லில் இருந்து பப்பாளி பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இவை கிலோ ரூ.60க்கு விற்பனையாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், மார்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் பெரியகோயிலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தாகம் தீர்க்கும் தர்பூசணியை அதிகம் வாங்கு சாப்பிடுகின்றனர். இன்னும் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படாததால் தற்போது சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அடுத்த 2 வாரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்பதால் இன்னும் வியாபாரம் சூடு பிடிக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.