பந்தநல்லூரை பரபரப்பாக்கிய சம்பவம்... என்ன நடந்தது: முழு விபரம் இதோ!!!
தர்ஷிகாவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூரை பரபரப்பாக்கி உள்ளது ஒரு அதிர்ச்சி சம்பவம். ஆனால் பொங்கி வந்த பாலில் தண்ணீர் தெளித்தது போல் உண்மை தெரிய வந்துள்ளது. அந்த பரபரப்பு சம்பவம் இதுதாங்க.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பந்தநல்லூர் அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்த சிறுமியை புதைத்த இடம் தோண்டப்பட்டு இருந்ததால் ஏற்பட்ட பரபரப்புதான். அது... இதனால் புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயமானதாக கூறப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே அரசடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு (48). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மேகலா (33) இவர்களுக்கு மூன்று மகள்கள். இதில் இரண்டாவது மகள் தர்ஷிகா (12) பந்தநல்லூர் அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக தர்ஷிகாவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் சிறுமி தர்ஷிகா இறந்து விட்டார். இது பெற்றோருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து சிறுமி தர்ஷிகாவின் உடலை அவரது குடும்பத்தினரின் முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு மண்ணியாறு இடுகாட்டில் புதைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இடுகாடு வழியாக வந்த சிலர் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடன் சிறுமியின் உறவினர்களுக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே மகளை இழந்த சோகத்தில் இருந்த பெற்றோருக்கு இது மேலும் பேரிடியாக அமைந்தது. இதற்கிடையில் இந்த தகவல் மக்கள் மத்தியில் நரபலிக்காக சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டதாக வதந்திகள் வெகு வேகமாக பரவத் தொடங்கியது.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் அரசடி கிராம மக்கள் இடுகாட்டில் வந்து பார்த்தபோது சிறுமியின் உடை மட்டும் லேசாக வெளியே தெரிந்துள்ளது. எனவே அவரது உடல் உள்ளே உள்ளதா அல்லது தோண்டி அடுத்த சென்று விட்டார்களா என்ற சந்தேகம் எழுந்தது. அப்படி எடுத்து சென்றதற்கு என்ன காரணம் என்று தெரியாததால் சிறுமியின் பெற்றோர் அழுகை பார்ப்பவர்கள் இதயத்தை குத்தியது.
இதுகுறித்து பந்தநல்லூர் போலீசாருக்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தகவல் அளித்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து திருவிடைமருதூர் தாசில்தார் சாந்தமீனா முன்னிலையில் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்ட முடிவு செய்யப்பட்டது.
பின்னர் அந்த பள்ளம் மீண்டும் தோண்டி ஆய்வு செய்தபோது அதே இடத்தில் சிறுமியின் உடல் இருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசுவாசம் அடைந்தனர். மேலும் பெற்றோர் தரப்பில் இருந்து இது சம்பந்தமாக எந்த வழக்கும் கொடுக்கவில்லை. இதனால் சிறுமியின் உடல் அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. காலை முதல் மண்ணியாரு இடுகாடு பகுதி பொதுமக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்பட்டது இந்த பிரச்சினை உடனடியாக முடிவுக்கு வந்ததால் அனைவரும் நிம்மதியுடன் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் தனிப்பட்ட முறையில் சிறுமி உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டியது யார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.





















