வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 வேலை உணவுக்கூட திமுக அரசு வழங்கவில்லை - ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு
வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு மூன்று வேலை உணவுக்கூட திமுக அரசு வழங்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கடந்த நவம்பர் 11ஆம் தேதி தமிழகத்திலேயே அதிகப்படியாக ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழையானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பதிவானது. இதனால் சீர்காழி நகர் மட்டுமின்றி சீர்காழி தாலுக்கா முழுவதும் தண்ணீரில் மூழ்கி தற்போது வரை தத்தளித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அரசு போர்க்கால அடிப்படையில் தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகளிலும், மின் கம்பங்களை சரி செய்யும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,67,500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பா, தாளடி பயிர்களில் 87,500 ஏக்கர் நிலப்பரப்பு மழை நீரால் சூழப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள மொத்த சாகுபடி பரப்பான 30 ஆயிரம் ஏக்கரில் 25 ஆயிரம் ஏக்கர் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி பகுதிகளில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டு அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டு நிவாரணம் வழங்கி வருகிறார்.
தொடர்ந்து சீர்காழி அருகே பெருந்தோட்டம், மணிகிராமம் பகுதியை பார்வையிட்ட வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளம், புயல் பாதிப்பின் போது நிவாரணத்தொகை கூடுதலாக வழங்கினோம். ஆனால், தற்பொழுது வரலாறு காணாத அளவில் மழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தி தாழ்வான பகுதியில் குடியிருப்பு வீடுகள் தண்ணீர் சூழ்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்றுவேளை உணவு சரியாக வழங்கப்படுவதில்லை. பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது போதாது கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும். திருவெண்காடு பகுதிக்கு வந்த தமிழக முதல்வர் அதன் அருகில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள பெருந்தோட்டம் பகுதிக்கு வந்து பார்வையிடாமல் சென்றுள்ளார் என்று கூறினார்.
மேலும், செய்தியாளர்கள் தற்போது மழையால் தொகுப்பு வீடுகள் பெரும் பாதிப்படைந்துள்ளதாகவும், அதிமுக பத்தாண்டு ஆட்சிகாலத்தில் சீரமைத்து தரவில்லையே ஏன் என கேட்ட கேள்விக்கு? கூரை வீடுகள் மட்டுமே பாதிப்படைந்துள்ளது தொகுப்பு வீடுகள் பாதிப்பு அடையவில்லை என பதிலளித்தார். செய்தியாளர்கள் பாதிக்க பட்ட தொகுப்பு வீடுகளை காண்பிக்கிறோம் வாருங்கள் என தெரிவித்ததும், பின்னர், ‘ஆமாம் ஆமாம்’ 10 வீடு பாதித்துள்ளது என கூறி மழுப்பி சென்றார்.