தஞ்சை அருகே வாரந்தோறும் தவறாமல் நடக்கும் மாட்டுச்சந்தை: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி
சராசரியாக வாரத்திற்கு ஒருமுறை இந்த மாட்டுச்சந்தையில் 400 முதல் 500 மாடுகள் வரை விற்பனையாகிறது.
தஞ்சாவூர்: தஞ்சை அருகே 8.கரம்பை பைபாஸ் அருகில் வெள்ளிக்கிழமைதோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. வாராவாரம் குறைந்தது 400 முதல் 500 மாடுகள் வரை பிற மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மாடுகள் வாங்க மற்றும் விற்க இங்கு எளிதாக வந்து செல்ல முடிகிறது என்று தெரிவித்தனர்.
குடும்பத்தை காப்பாற்ற உதவும் கால்நடைகள்
‘நான்கு மாடுகள் இருந்தால் ஒரு குடும்பம் பிழைத்துக்கொள்ளும்’ என்று கிராமங்களில் கூறுவர். இது உண்மையிலேயே சரியான ஒன்றாகும். மாடு மட்டுமல்ல... தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர வருமானம் கிடைக்கும் வகையில் கிராமங்களில் ஆடு, கோழிகள் வளர்ப்பையும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பயிர் சாகுபடி இல்லாத காலத்தில் குடும்பத்தை காப்பாற்ற மாடு, ஆடுகள், கோழிகள் உதவுகிறது.
ஆட்டு இறைச்சி, பால், முட்டை என கால்நடைகளில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருள்களுக்குமே சிறப்பான சந்தை வாய்ப்புகள் உள்ளன. அவசரத் தேவைக்கும் கால்நடைகளை விற்று உடனடியாகப் பணமாக்கலாம். கிராமப்புற மக்களின் பொருளாதாரத் தேவையில் பெரும் பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை. கொரோனா லாக்டவுனிற்கு முன்பாக தஞ்சாவூர் வடக்குவாசல் பகுதியில் மாட்டுச்சந்தை நடந்து வந்தது. சுகாதாரமற்ற இடத்தில் அந்த மாட்டுச்சந்தை இயங்கி வந்தது. கொரோனா காலத்திற்கு பின்னர் வடக்கு வாசல் பகுதியில் மாட்டுச்சந்தை இயங்கவில்லை.
வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நிலை
இதனால் விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்கவும், புதிய மாடுகளை வாங்கவும் இயலாமல் தவித்து வந்தனர். இதற்காக வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நிலை இருந்து வந்தது. இதனால் கூடுதல் செலவான நிலையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தவித்து வந்தனர். தங்களின் மாடுகளை விற்பனை செய்து விட்டு புதிதாக மாடுகள் வாங்க இயலாத நிலையில் விவசாயிகள் வருமானத்தில் இழப்பை சந்தித்து வந்தனர்.
கறவைமாடுகள், உழவு மாடுகள் விற்பனை
இந்நிலையில் தஞ்சை அருகே 8.கரம்பை பைபாஸ் பகுதியில் மாடுகளை கொண்டு வரும் வாகனங்கள் நிறுத்த போதுமான இடம், சரியான தரைதளம் போன்ற தேவையான அனைத்து வசதிகளுடன் தனியார் இடத்தில் மாட்டுச்சந்தை வெள்ளிக்கிழமை தோறும் நடந்து வருகிறது. இந்த மாட்டுச்சந்தையில் நாட்டு மாடுகள், கறவை மாடுகள், உழவுப்பணிக்கான மாடுகள் என பிற மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து விற்றும், புதிய மாடுகளை வாங்கியும் செல்கின்றனர். சராசரியாக வாரத்திற்கு ஒருமுறை இந்த மாட்டுச்சந்தையில் 400 முதல் 500 மாடுகள் வரை விற்பனையாகிறது. சராசரியாக ரூ.20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையில் மாடுகள் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது.
வாரந்தோறும் தவறாமல் மாட்டுச்சந்தை
இதுகுறித்து 8.கரம்பை பகுதியை சேர்ந்த விவசாயி விஜயகுமார் கூறியதாவது: தற்போது இங்கு வாரந்தோறும் மாட்டுச் சந்தை நடந்து வருகிறது. இதனால் தஞ்சை பகுதியில் மாடுகள் வளர்ப்பவர்கள், விவசாயிகள் தங்கள் மாட்டை விற்பனைக்கு கொண்டு வருவது எளிதான ஒன்றாக உள்ளது. மேலும் புதிய மாடுகளையும் வாங்கி செல்கின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் சாகுபடி பணிகள் நடக்காத போது வெகுவாக வருமானத்திற்கு கை கொடுப்பது கால்நடைகள்தான். எனவே இந்த மாட்டுச்சந்தை எங்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும் ஒன்றாக உள்ளது. அருகில் உள்ள பகுதிகள் முழுவதும் கிராமங்கள்தான். அதனால் விவசாயிகள் தங்களின் மாடுகளை விற்பனை செய்ய இந்த இடம் ஏதுவான ஒன்றாக இருக்கிறது என்றார்.